Udhaynidhi Stalin PT
தமிழ்நாடு

செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் உதயநிதியிடம் விசாரணை.. இரவுக்குள் விசாரணை முடியுமா?

காவிரி கண்டன ஆர்ப்பாட்ட உரை சர்ச்சையான நிலையில், எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி மீது பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைதுசெய்து தஞ்சை அழைத்துசெல்லப்பட்ட நிலையில், திருச்சி வழியாக செங்கிப்பட்டி காவல்நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டார்.

PT WEB

காவிரி விவகாரத்தில் தஞ்சையில் நடந்த திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக உதயநிதி ஸ்டாலின்மீது தவெக மகளிரணி புகார் அளித்தது. 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் வீட்டிலேயே கைது செய்யப்பட்டார். இதையடுத்து மாநிலம் முழுவதும் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை அழைத்துச் செல்லும் வழியில் வாகனம் திருச்சி நோக்கி திருப்பப்பட்டு, இறுதியில் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணை நடைபெறுகிறது.

செய்தியாளர் - M. மீரா

காவிரி விவகாரத்தில், தமிழக அரசின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று கூறி, தஞ்சையில் திமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அப்போது உதயநிதி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது தவெக மகளிரணி சார்பில் தஞ்சை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின்பேரில், 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த தஞ்சை காவல்துறையினர், இன்று காலை அவரது வீட்டில் வைத்து உதயநிதி ஸ்டாலினை கைது செய்தனர்.

DMK protest

உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலினை, சாலை மார்க்கமாக தஞ்சாவூருக்கு காவல்துறையினர் தங்கள் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விசாரணைக்கு அழைத்து வரப்பட இருக்கும் நிலையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள் தஞ்சை வந்துள்ளனர். தஞ்சை தெற்கு காவல் நிலையத்தைச் சுற்றியும் பேரிகார்டுகள் மூலம் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தஞ்சையில் திமுகவினரின் போராட்டம் வலுத்து வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை அழைத்துச் செல்லும் வாகனம் பாதி வழியிலேயே திருச்சி நோக்கி U-Turn அடித்தது.

செங்கிப்பட்டி காவல்நிலையம்

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ள நிலையிலும், அவரை அரியலூர் வழியாகத் தஞ்சைக்கு அழைத்துச் செல்லாமல் திருச்சி வழியே சுற்றி அழைத்துச் சென்று காவல்துறையினர் அலைக்கழிப்பதாகத் திமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின். தற்போது செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். செங்கிப்பட்டி காவல்நிலையத்திற்கு திமுக தொண்டர்கள் குவிந்துள்ளதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.