உதயநிதி ஸ்டாலின் Pt web
தமிழ்நாடு

சர்ச்சை பேச்சு| உதயநிதி அதிரடி கைது - நீதிமன்றம் கூறியது என்ன? முழு விவரம்

காவிரி விவகாரம் கண்டன ஆர்ப்பாட்டத்தில் உதயநிதியின் சர்ச்சை பேச்சால் தவெக மகளிரணி புகார் அளித்த நிலையில், இதனைத் தொடர்ந்து தஞ்சையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

PT WEB

தஞ்சையில் காவிரி விவகாரம் தொடர்பாக திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சையாக பேசிய உதயநிதி ஸ்டாலினை 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தஞ்சை காவல்துறை இன்று காலை அவரது வீட்டில் வைத்து கைது செய்தது. பின்னர் மாநிலம் முழுவதும் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், உதயநிதி தஞ்சாவூருக்கு காவல் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.

செய்தியாளர் - M. மீரா

தஞ்சையில் திமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவிரி விவகாரத்தில், தமிழக அரசின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று கூறி, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது உதயநிதி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது தவெக மகளிரணி சார்பில் தஞ்சை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

Udhayanidhi Stalin

அந்தப் புகாரின்பேரில், 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த தஞ்சை காவல்துறையினர், இன்று காலை அவரது வீட்டில் வைத்து உதயநிதி ஸ்டாலினை கைது செய்தனர்.

உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலினை, சாலை மார்க்கமாக தஞ்சாவூருக்கு காவல்துறையினர் தங்கள் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று பிற்பகலில் விசாரணைக்கு வந்தது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விட்டார். அதனால் முன் ஜாமீன் கோரலாம் என அரசு தரப்பில் வாதாடினார்கள்.

எதிர்க்கட்சி தலைவரை நீதிமன்றம் கொண்டு சென்று ரிமாண்ட் செய்யும் எண்ணம் போலீசாருக்கு இல்லை. காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி விட்டு சொந்த ஜாமீனில் விடுவிக்கப் போகிறோம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Udhayanidhi Stalin

இதை குறித்துக் கொண்ட நீதிமன்றம், நாளைய தினம் முக்கியமான சட்டமன்றக் கூட்டத்தொடர் இருப்பதால் இன்றே விசாரணையை முடித்துக் கொண்டு விடுவிக்க வேண்டும் என்றும் விசாரணையை நாளை வரை கொண்டு செல்லக் கூடாது. அதேபோல், விசாரணைக்கு உதயநிதி ஸ்டாலின் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.