கூட்ட நெரிசலில் சிக்கி சகோதர்கள் 2 பேர் உயிரிழப்பு pt web
தமிழ்நாடு

கரூர் துயரம்| நான்கு குழந்தைகளுடன் சென்ற தாய்.. மயக்கம் தெளிந்தபோது இரு மகள்கள் உயிரிழந்த சோகம்

கரூர் தவெக பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சார்ந்த சகோதரிகள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

கரூரில் தவெக தலைவர் விஜய் நேற்று பரப்புரை மேற்கொண்டபோது, கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. இதனால், அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 41 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

விஜய் பரப்புரையில், கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி கடவூர் அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தாரும் பங்கேற்ற நிலையில், சகோதரிகள் இருவர் மரணித்துள்ளனர்.

உயிரிழந்த சகோதரிகள்

கடாவூர் அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சார்ந்தவர்கள் ஓட்டுநர் வேலை செய்யும் பெருமாள், தையல் தொழில் செய்யும் அவரது மனைவி. இந்த தம்பதிக்கு, நான்கு குழந்தைகள் பிறந்துள்ளனர். முதல் மகள் பத்தாம் வகுப்பும், இரண்டாவது மகள் கோகிலா ஆறாம் வகுப்பும், மூன்றாவது மகள் பழனியம்மாள் மூன்றாம் வகுப்பும் படித்து வந்துள்ளனர். கடைசி பிள்ளையாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த நிலையில்தான், வேலுச்சாமிபுரத்திற்கு நேற்று விஜய் பரப்புரைக்காக வந்தபோது, அவரை பார்ப்பதற்காக நான்கு பிள்ளைகளுடன் சென்றிருக்கிறார் தாய். கூட்ட நெரிசல் கைமீறிச்சென்ற நிலையில், மயக்கமுற்றதாகவும்.. கண் விழித்து பார்த்தால் தன்னுடைய மூத்த மகள் மற்றும் கடைசி மகன் மட்டுமே உயிருடன் இருந்ததாகவும் கூறுகிறார் அவர்.

உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர் மற்றும் அவர்களது மூத்த மகள்

கூட்ட நெரிசலில் இறந்த சகோதரிகளின் தந்தை கூறும்போது, “விஜயை நேரில் பார்க்க வேண்டும் என மூத்த மகள் கூறினார். ஆனால், விஜயை பார்க்க நிறைய கூட்டம் வருகிறது. வேண்டாம்மா எனக் கூறினேன். ஆனால், மூத்த மகள் கேட்கவில்லை. அதனாலேயே, விஜயைப் பார்க்க வேலுச்சாமிபுரம் பகுதிக்கு சென்றோம்” எனத் தெரிவிக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து மூத்த மகள் கூறும்போது, "விஜய் வண்டி வரும் போது கூட்ட நெரிசலில் எங்கம்மா எங்க போனாங்க, நான் எங்க போனேன்னே தெரில. அப்போ எனக்கும் ஒரு மாதிரி ஆச்சி. அப்றம் ஒரு அண்ணா தா என்ன தூக்கி விட்டாங்க. அப்றம் தா அம்மாவ பாக்க போனேன். அப்ப அவங்க மயக்கத்துல இருந்தாங்க. அவங்களுக்கு தண்ணி கொடுத்து எழுப்பினேன்” எனக் கூறியிருக்கிறார்.

இப்படியாக, கூட்ட நெரிசலில் சிக்கி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.