விஜய் புதியதலைமுறை
தமிழ்நாடு

கடும் கோபத்தில் தவெக தலைவர் விஜய்...? பொதுச்செயலாளர் ஆனந்துக்கு பறந்த உத்தரவு!

தனது கடைசி படத்தில் பிசியாக நடித்து வரும் அதே வேளையில், கட்சி நிர்வாகிகளுடன் தொடர் ஆலோசனையை மேற்கொண்டு வரும் விஜய், பொதுச்செயலாளர் ஆனந்திற்கு முக்கிய உத்தரவை போட்டுள்ளார். அது என்ன? பார்க்கலாம்...

Uvaram P

தனது கடைசி படத்தில் பிசியாக நடித்து வரும் அதே வேளையில், கட்சி நிர்வாகிகளுடன் தொடர் ஆலோசனையை மேற்கொண்டு வரும் விஜய், தவெக பொதுச்செயலாளர் ஆனந்திற்கு முக்கிய உத்தரவை போட்டுள்ளார். குறிப்பாக, இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, நிர்வாகிகள் நியமனம் தொடங்கி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் வரை, விஜய் போடும் கணக்கு என்ன என்பதை பார்க்கலாம்.

தவெக தலைவர் விஜய்

தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக மிளிரும் விஜய், கடந்த ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, அரசியல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார். உறுப்பினர் சேர்க்கை துவங்கி, கொள்கை விளக்க மாநாடு, செயற்குழு கூட்டம், நிர்வாகிகளுடனான தொடர் ஆலோசனை என்று அரசியல் களத்தில் சுற்றிச் சுழல துவங்கி இருக்கிறார் விஜய்.

2026ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்து களமிறங்கி இருக்கும் விஜய், அதற்கு இடைப்பட்ட காலத்தில் வரும் இடைத்தேர்தல்களையும் தவிர்க்க முடிவு செய்துள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரியில் கட்சி தொடங்கி, 2 முக்கிய மேடைகளை ஏறியது, அலுவலகத்தில் அழைத்துவந்து மக்களுக்கு நிவாரணம் கொடுத்தது, மாநிலத்தின் முக்கிய பிரச்னைகளுக்கு அறிக்கை விடுவது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

விஜய்

எனினும், அவர் ஏன் மக்களை நேரடியாக சென்று சந்திக்கவில்லை. இது என்ன work from home அரசியலா என்று, அவருக்கு எதிர் துருவத்தில் இருக்கும் பலரும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். கடைசி படத்தின் ஷூட்டிங் நடைபெறுவதால், அதனை முடித்துக்கொடுத்துவிட்டு களத்திற்கு நேரடியாக வருவார் என்று தவெக தர்ப்பில் விளக்கமளிக்கின்றனர்.

இவை அனைத்தையும்தாண்டி, மாநாடு முடிந்து அடுத்த 3 நாட்களில் செயற்குழுவை கூட்டிய விஜய், அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடமும் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, 3 மாதங்களுக்குள்ளாக அனைத்து தொகுதிகளுக்கும் பயணித்து, ஆய்வு செய்து மாவட்ட நிர்வாகிகள் நியமனத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று பொதுச்செயலாளர் ஆனந்திற்கு உத்தரவிட்டிருந்தார் விஜய். அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில், 2 தொகுதிக்கு 1 மாவட்டச் செயலாளர் என்று, சுமார் 110 மாவட்ட செயலாளரை நியமிக்க திட்டமிட்டுள்ளார்.

தவெக தலைவர் விஜய்

இப்படியான தொடர் ஆலோசனையின் ஒரு பகுதியாக, சென்னை பனையூரில் உள்ள தவெகவின் தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்திய விஜய், பல முக்கிய உத்தரவுகளை போட்டுள்ளார். அதன்படி, இந்த ஜனவரி மாதத்திற்குள் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களையும் நியமிக்க வேண்டும் என்று கூறிய அவர், யாரையெல்லாம் பொறுப்பாளர்களாக நியமிக்கலாம் என்ற பட்டியலை தயார் செய்து தன்னிடம் கொடுக்க வேண்டும் என்று பொதுச்செயலாளர் ஆனந்திற்கு உத்தரவிட்டுள்ளார். இப்படியாக, ஜனவரி இறுதிக்குள் கட்சியின் உட்கட்டமைப்பு பணிகளை முடிக்க ஆணை பிறப்பித்துள்ளார் விஜய்.

தொடர்ந்து, வரும் பிப்ரவரி 2ம் தேதி அன்று, கட்சியின் முதலாம் ஆண்டு துவக்க விழாவை, தமிழ்நாடு முழுக்க வெகு விமர்சையாக கொண்டாட வேண்டும் என்று அறிவுறுத்திய விஜய், மாவட்டச் செயலாளர் அனைவரையும் அழைத்து ஆலோசனை செய்து, மார்ச் மாத துவக்கம் முதலே தனது சுற்றுப்பயணத்தை துவங்கவும் திட்டமிட்டுள்ளார். அப்படி, மார்ச் மாதத்தில் இருந்து தமிழ்நாடு முழுக்க அனைத்து பகுதிகளுக்கும் நேரடியாக சென்று மக்களை சந்திக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.