தவெக பொதுச்செயலாளருக்கு பறந்த உத்தரவு... மார்ச் முதல் சுற்றுப்பயணம்? விஜய் போடும் கணக்கு என்ன?
செய்தியாளர்: சந்தானகுமார்
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் தொடங்கி 10 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. அடுத்த மாதம் (பிப்ரவரி) வந்தால் ஓராண்டு நிறைவடையும் நிலையில், கட்சியின் முக்கிய தூண்களாக இருக்கும் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் என்பது தற்போது வரை நடைபெறவில்லை. இருப்பினும் கட்சி பணிகள் தொடர்பாக பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் முக்கிய நிர்வாகிகளை அவ்வப்போது விஜய் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
கடந்த மூன்று மாதங்களாக கட்சியின் உட்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வந்தாலும் தற்போது வரை மாவட்டச் செயலாளர் நியமனம் முடியவில்லை என்பது கட்சித்தலைவர் விஜய்க்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாகவும், ஆலோசனை கூட்டத்தில் ‘இந்த மாதத்திற்குள் உட்கட்டமைப்பு பணிகளை முடிக்க வேண்டும்’ என அவர் கட்சியின் பொதுச்செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.
உட்கட்டமைப்பு பணிகளை ஜனவரி மாதத்திற்குள் முடித்தால்தான், தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியும் என சொல்லப்படுகிறது.
விஜய் நடித்து வரும் கடைசி திரைப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்தில் நிறைவடையும் எனக்கூறப்படும் நிலையில், மார்ச் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதற்கு முன்பு முதலில் கட்சியின் கட்டமைப்பு பணிகளை முடிக்கும் வேலையை செய்ய வேண்டும் என விஜய் நிர்வாகிகளுக்கு வலியுறுத்தி உள்ளாராம்.
முன்னதாக, கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் உள்ளிட்ட சில சம்பவங்களுக்காக மட்டுமே விஜய் வெளியே வந்துள்ளார். பெரும்பாலான விஷயங்களை சமூக வலைதளங்கள் மூலமாகவோ அல்லது பனையூர் தலைமை அலுவலகம் மூலமாகவோ தான் எதிர்கொண்டு வருகிறார். அதனால், விஜய் மீது கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது. விஜய் எப்போது களத்திற்கு வருவார் என பலரும் கேள்விகளை முன் வைத்து வருகின்றனர். அந்த வகையில் மார்ச் மாதம் இந்த பயணத்தை சரியாக திட்டமிட்டால் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பது மட்டுமல்லாமல் 2026 சட்டமன்ற தேர்தலுக்கும் அடித்தளம் அமைப்பதாக அமையும்.