பரந்தூர் மக்கள் - தவெக தலைவர் விஜய் முகநூல் | கோப்புப்படம்
தமிழ்நாடு

பரந்தூர் கிராம மக்களை விரைவில் சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்?

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களை தவெக தலைவர் விஜய் விரைவில் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

திவ்யா தங்கராஜ்

2026 தேர்தலை இலக்காக வைத்து களமிறங்கி இருக்கும் தவெக தலைவர் விஜய் அதற்கான பணிகளை துவங்கியுள்ளார். இதற்காக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த அக். 27 தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடத்தி மக்களை சந்தித்தார். அப்போது அரசியல் அறிவிப்பிற்கு பிறகு முதன்முறையாக அரசியல் மேடையில் விஜய் வந்ததால் அவர் என்ன பேசுவார், என்ன கொள்கையோடு இருக்கப்போகிறார் என்பது குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு உருவானது.

தவெக தலைவர் விஜய்

அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்யும் வகையில் நீட் தேர்வு, ஊழல், 2026 இலக்கு, திமுக, பாஜக கட்சிகள் மீதான விமர்சனம், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என பல விஷயங்களை பேசினார் விஜய். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரிடம் இருந்தும் பல வித விமர்சனங்கள் வந்தன. பலரும், ‘விஜய் மேடையில் பேசலாம்; ஆனால் களத்தில் அவரால் வர முடியாது’ என விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில் மாநாட்டிற்கு பிறகு தமிழ்நாட்டில் நடக்கும் முக்கிய பிரச்னைகள் குறித்து அறிக்கை மூலம் கருத்து தெரிவித்து வந்தார். சமீபத்தில்கூட அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநரை சந்தித்த விஜய், பத்திரிகையாளர்களை சந்திக்காமல் சென்றார். இதுபோன்ற காரணங்களால் “விஜய் இன்னும் மக்களை சந்திக்கவில்லை , அறிக்கை மூலமாக அரசியல் செய்வது எடுபடாது” என விமர்சனங்கள் எழுந்து வந்தன.

தவெக விஜய் - ஆளுநர் ஆர்.என்.ரவி

அந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புற்று வைக்கும் விதமாக, விஜய் தன்னுடைய கடைசி படத்தை முடித்துவிட்டு மக்களை சந்திக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியானது. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செல்லவிருக்கிறார் என பேசப்பட்டு வந்த நிலையில், விஜய்யின் அடுத்த அரசியல் திட்டம் குறித்தான ஒரு முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

வரும் மார்ச் மாதம் முதல் தொடர்ந்து மக்களை சந்திக்கவும், சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், வருகின்ற 19 அல்லது 20 ஆம் தேதி மக்கள் பயணத்தை பரந்தூரிலிருந்து தொடங்க விஜய் திட்டமிட்டுள்ளார் என சொல்லப்படுகிறது.

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதை எதிர்த்து மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தவெக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் வழக்கறிஞர் வெங்கட்ராமன் கடிதம் ஒன்றை வழங்கி உள்ளார். அதில் “இந்த மாதம் 19 அல்லது 20ஆம் தேதி விஜய் பரந்தூர் விவசாயிகளை சந்தித்து பேச உள்ளார். அதற்கான அனுமதியையும் பாதுகாப்பையும் வழங்க வேண்டும்” என இருப்பதாக கூறப்படுகிறது.

பரந்தூர் விமான நிலையம்

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து ஏற்ஜெனவே தவெக-வின் முதல் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.