சில தினங்களுக்கு முன்னதாக, தவெக பேனர்களில் தனக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் பேசுபொருளான நிலையில், அதற்கு ரியாக்ட் செய்யும் விதமாக பேசியுள்ளார் ஆனந்த். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வடக்கு மாவட்ட தவெக சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜயின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. சில தினங்களுக்கு முன்னதாக விஜய் தனது 51வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், மாவட்டந்தோறும் தவெகவினர் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், கொள்கை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியாக நடைபெற்ற இந்த விழாவில், பொதுச்செயலாளர் ஆனந்த், கொள்கை பரப்புப் பொதுச்செயலாளர் அருண்ராஜ், கொ.ப.செ ராஜ்மோகன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பங்கேற்று உரையாற்றினர்.
இந்தக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற நிலையில், உரையாற்றிய ஆனந்த், உயிர்.. மூச்சு.. நாடி.. அனைத்தும் தலைவருக்கே இனிவரும் காலங்களில் தலைவர் என்ன சொல்கிறாரோ அதன்படிதான் நாம் செயல்பட வேண்டும். குறிப்பாக, பேனர்கள், விளம்பர பலகைகளில் கட்சியின் தலைவர் விஜய் மற்றும் கொள்கைத் தலைவர்களின் படங்கள் மட்டுமே இருக்க வேண்டும். தனது படம் இருக்கக் கூடாது என்று கண்டிப்போடு தெரிவித்தார். சில தினங்களுக்கு முன்னதாக, பேனர்களில் விஜய் படத்தோடு ஆனந்தின் புகைப்படங்கள் இடம்பெறுவது சொந்த கட்சியினரிடையே விமர்சனத்திற்கு உள்ளானது.
தலைவர் விஜயின் உத்தரவு மற்றும் ஆனந்தின் வழிகாட்டுதலின் பேரில் என்று மா.செக்கள் குறிப்பிடுவதும் பேசுபொருளானது. விஜயின் உத்தரவு.. வழிகாட்டுதலின் பெயரில்தான் பதிவிட வேண்டும்.. எல்லா இடங்களிலும் ஆனந்தையும் எதற்கு முன்னிலைபடுத்த வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பதிவுகளை பார்க்க முடிந்தது. இந்நிலையில்தான், விளம்பரங்களில் தனது ஃபோட்டோ வேண்டாம் என்று கூறி விமர்சனத்திற்கு முற்று வைத்திருக்கிறார் ஆனந்த்.