தவெக தலைவர் விஜய் pt web
தமிழ்நாடு

அதிமுகவிற்கு எதிராக முதல்முறை.. திமுக, பாஜகவிற்கு எதிராகவும் வெடித்து பேசிய விஜய்..!

தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்று வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் வேட்பாளராக விஜயை தேர்வு செய்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

PT digital Desk

தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்று வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் வேட்பாளராக விஜயை தேர்வு செய்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பேரவைத் தேர்தலையொட்டி ஆகஸ்டில் மாநில மாநாடு என்றும், செப்டம்பரில் விஜயின் சுற்றுப்பயணம் இருக்குமென்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் செயற்குழுவில் தெரிவித்திருக்கிறார். அது தொடர்பான தீர்மானங்களும் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

முன்னதாக, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இருந்துதான் விஜயின் சுற்றுப்பயணம் இருக்குமென்று தவெக தரப்பில் செய்திகள் வெளியானது. மிக முக்கியமாக விஜயின் முதல் சுற்றுப்பயணம் என்பது விவசாயிகளை சந்திக்கும், விவசாயிகளைச் சார்ந்த சுற்றுப்பயணமாகவே இருக்கும் என தவெக தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அதேபோல அக்கட்சியின் மாநில மாநாடு திருச்சி அல்லது மதுரையில் நடத்துவதற்கான திட்டமிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

அதேபோல் தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் விவகாரங்கள் தொடர்பான முடிவுகளில் இறுதி முடிவுகளை எடுப்பதற்கான அதிகாரம் விஜய்க்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மேலும், கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு வழங்கி தவெக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய் முதல் இரண்டு தீர்மானங்களை வாசித்தார். இரண்டாவது தீர்மானத்தை வாசித்த விஜய், “கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன் என்றைக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கூட்டணி இல்லை” எனத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், “ஒன்றிய அளவில் மலிவான அரசியல் ஆதாயங்களுக்காக, மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்தி மக்களிடையே வேற்றுமையை விதைத்து அதில் குளிர்காய நினைக்கிறது பாஜக. அவர்களின் இந்த விஷமத்தனமான வேலைகள் வேறு எங்கு வேண்டுமானாலும் எடுபடலாம்; ஆனால் தமிழகத்தில் ஒருபோதும் எடுபடாது. இங்கு தந்தை பெரியாரை அவமதித்தோ, அறிஞர் அண்ணாவை அவதூறுக்கு உள்ளாக்கியோ தமிழ்நாட்டின் மதிப்பிற்குறிய தலைவர்களை வைத்தோ அரசியல் செய்ய நினைத்தால் அதில் பாஜக ஒருபோதும் வெற்றி பெற இயலாது. சுய அரசியல் லாபங்களுக்காக பாஜகவுடன் கூடிக் குலைந்து கூட்டணி போக திமுகவோ அதிமுகவோ இல்லை தவெக. கூட்டணி என்றாலும் தவெக தலைமையில் அமையும் கூட்டணி திமுக மற்றும் பாஜகவிற்கு எதிரானதாகத்தான் இருக்கும். அதில் சமரசம் என்ற பேச்சிற்கே இடமில்லை” எனத் தெரிவித்தார்.

முதல் தீர்மானத்தை வாசித்த விஜய், “விவசாயிகள் பக்கம் எப்போதும் நிற்போம்” எனத் தெரிவித்தார். இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தையும் வாசித்துக் காட்டினார்.