2021 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து தனி அணி அமைத்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட அமமுக, ஒரு தொகுதியிலும் வெற்றிபெறவில்லை என்றாலும் அதிமுகவின் வெற்றியை தடுக்கும் முக்கிய காரணியாகத் திகழ்ந்தது. அந்தத் தேர்தலில் 2.35 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்ற அமமுக, சுமார் 20 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணியின் குறிப்பாக அதிமுகவின் வெற்றியை தடுத்து அதன் ஆட்சிக் கனவை தகர்த்தது. இந்தக் காரணத்தால்தான், 2026 சட்டமன்றத் தேர்தலில் அந்த கட்சி எந்த கூட்டணியில் இடம்பெறப் போகிறது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியதும், அமமுக இணைந்துகொண்டது. அப்போதும் அதிமுக வாக்கு வங்கியில் சேதாரத்தை ஏற்படுத்தியது அமமுக. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு ஓர் ஆண்டுக்கு முன்னரே அதிமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துகொண்ட நிலையில் அதுவரை பாஜகவுடன் நெருக்கம் காட்டிய அமமுக வேறுவழியின்றி விலக நேர்ந்தது. எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க மாட்டோம் என கறாராக பேட்டி கொடுத்தார் டிடிவி தினகரன். அத்துடன் விஜய்யின் மக்கள் செல்வாக்கை வியந்தும் அவ்வப்போது பேசினார் தினகரன். இதனால் கூட்டணி ஆட்சியை வலியுறுத்தும் தவெகவுடன் கூட்டணி சேர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே எதிர்கட்சிகள் பிரிந்து நின்று திமுக வெற்றி பெற பாதை அமைத்துதரக் கூடாது என்பதில் உறுதியாக உள்ள பாஜக, டிடிவி தினகரனுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியது.
இந்த விஷயத்தில் எடப்பாடி பழனிசாமியையும் சம்மதிக்க வைத்து அமமுகவுக்கு 7 இடங்களை உறுதி செய்துவிட்டதாக கூறுகின்றனர். மற்றொருபுறம் தவெக நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், டிடிவி தினகரனுடன் பேசி கூட்டணியை இறுதி செய்துவிட்டதாகவும் விரைவில் தவெக தலைமையிலான கூட்டணியில் அவர் இடம்பெறுவார் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த சூழலில்தான் அமமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் டிடிவி தினகரன் கூட்டணி குறித்த முடிவை அதிகாரபூர்வமாக அறிவித்து தன்னைச் சுற்றிவரும் யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.