கேரளா | சட்டப்பேரவை உரையில் திருத்தங்களை மேற்கொண்ட ஆளுநர்.. திருத்தி வாசித்த முதல்வர்!
கேரள சட்டசபையின் 2026-ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரின் உரையுடன் தொடங்கியது. இருப்பினும், உரை வாசிப்பின்போது சில முக்கியப் பகுதிகளை ஆளுநர் தவிர்த்தது சபையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மாநில அரசு தயாரித்துக் கொடுத்த 60-க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட உரையில், மத்திய அரசை விமர்சிக்கும் சில குறிப்பிட்ட பகுதிகளை ஆளுநர் வாசிக்காமல் தவிர்த்துள்ளார்.
ஆளுநர் தவிர்த்தவை
மத்திய அரசின் பாரபட்சமான நிதி ஒதுக்கீட்டால் கேரளா சந்திக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடி குறித்த 12-வது பத்தி. சட்டசபை நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருப்பது குறித்து மாநில அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது தொடர்பான 15-வது பத்தி. நிதிப் பகிர்வு என்பது மாநிலங்களின் உரிமை, அது ஒன்றும் மத்திய அரசு வழங்கும் சலுகை அல்ல என்ற 16-வது பத்தியின் கடைசி வரிகள் ஆகியவற்றை ஆளுநர் வாசிக்கவில்லை.
ஆளுநரின் இந்தச் செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் தவிர்த்த அந்தப் பகுதிகள் அனைத்தையும் சபையில் தானே வாசித்துக் காட்டினார். "ஆளுநர் வாசிப்பது மாநில அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட அரசின் கொள்கை அறிக்கை. எனவே, அவர் தவிர்த்த பகுதிகள் உட்பட அமைச்சரவை அங்கீகரித்த முழு உரையும் சபைக் குறிப்பில் அதிகாரப்பூர்வமாக இடம்பெற வேண்டும்" என்றும் சபாநாயகரிடம் முதல்வர் கோரிக்கை விடுத்தார். சபாநாயகர் ஏ.என். ஷம்ஷீர், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளாகவே, கேரள ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையே பல்கலைக்கழக நியமனங்கள் மற்றும் மசோதாக்கள் தொடர்பான மோதல் நிலவி வருகிறது. கடந்த 2024-ஆம் ஆண்டும் அன்றைய ஆளுநர் ஆரிப் முகமது கான், உரையின் முதல் மற்றும் கடைசிப் பத்தியை மட்டும் வாசித்துவிட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது. இன்று ஆளுநர் அர்லேக்கர் மத்திய அரசை விமர்சிக்கும் பகுதிகளை மட்டும் கவனமாகத் தவிர்த்திருப்பது மீண்டும் ஒரு மோதல் போக்கை உருவாக்கியுள்ளது. தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் ஆளுநர் உரை சர்ச்சையில் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

