விஜய் - டிடிவி தினகரன் web
தமிழ்நாடு

”பெண்களை அண்ணனாக பாதுகாப்பேன் என்ற வீரவசனம் என்னாச்சு..?” - டிடிவி தினகரன் விமர்சனம்

தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் பல்வேறு கொலைகள், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் என தொடர்ந்து நடந்துவரும் நிலையில் தமிழக முதல்வர் விஜயை டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

Rishan Vengai

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு குறித்து கையெழுத்திட்ட பின்னரும், 15 நாட்களில் 25 கொலைகள், பல பாலியல் வன்கொடுமைகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுகிறது. மரக்காணம், சூலூர், அண்ணா பல்கலைக்கழகம் சம்பவங்களை முன்வைத்து, ‘பெண்களை அண்ணனாக பாதுகாப்பேன் என்ற வீரவசனம் எங்கே?’ என்று டிடிவி தினகரன் கடுமையாக விமர்சிக்கிறார்.

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு போடப்பட்ட 3 கையெழுத்துகளில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு என்பவை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தன. முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பை உறுதி செய்வதற்காக 'சிங்கப்பெண்' என்ற பெயரிலான அதிரடி சிறப்புப் படை உருவாக்கம் செய்யப்படட்து.

தமிழ்நாடு அரசு

இந்தசூழலில் முதல்வராக விஜய் பொறுப்பேற்ற 15 நாட்களில் 25 கொலைகள் மற்றும் பல்வேறு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. ஆட்சி மாறினால் காட்சி மாறும் என்று தவெக பேசிவந்த நிலையில், குற்றங்களைத் தடுக்கவும், குற்றவாளிகளை ஒடுக்கவும் அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கேள்விகளை மக்களே எழுப்ப ஆரம்பித்துவிட்டனர்.

இந்தசூழலில் அண்ணனாக பெண்களை பாதுகாப்பேன் என்ற வீரவசனம் என்னாச்சு என தமிழக முதல்வர் விஜயை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் நடந்துவரும் குற்றச்செயல்களுக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் டிடிவி தினகரன், “விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 11 வயது சிறுமி -  குழந்தைகள் மற்றும் பெண்களின் அண்ணனாகவும், அரணாகவும் இருந்து பாதுகாப்பேன் என்ற முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் வீரவசனம் என்ன ஆனது?

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள வண்டிப்பாளையம் பகுதியில் 11 வயது சிறுமியை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்து துன்புறுத்திய நபர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட செய்தி ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்கும் முன்பாகவே, தற்போது மரக்காணத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த சம்பவம் தமிழகத்தில் ஒட்டுமொத்த பெண் குழந்தைகளின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிகழ்வைக் கண்டு கொதித்தெழுந்து தங்கைகள் அனைவருக்கும் அண்ணனாகவும், அரணாகவும் இருந்து பாதுகாப்பேன் எனக் கடிதம் எழுதிய திரு ஜோசப் விஜய் அவர்கள், தான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் அன்றாடம் அரங்கேறும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களைக் கண்டும் காணாமல் வாய்மூடி மௌனம் காப்பது ஏன் ?

எனவே, சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகக் கைதான குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையை பெற்று தருவதோடு, தனது ஆட்சியைப் பாதுகாப்பதில் செலுத்தும் கவனத்தைக் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பிலும் செலுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்” என எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளார்.