கோவை சிறுமி கொலை| ‘செய்தியாளர் சந்திப்பிற்கு முன் சிரித்த அதிகாரிகள்..’ அதிகரிக்கும் எதிர்ப்பு!
சிறுமி கொலை வழக்கில் செய்தியாளர் சந்திப்பிற்கு முன் கோவை மேற்குமண்டல ஐஜி உள்ளிட்ட காவல் அதிகாரிகள் சிரித்துக்கொண்டிருக்கும் காட்சி நேரலையில் ஒளிபரப்பாகி வைரலானது. 10 வயது குழந்தை மீதான கொடூரம் நாட்டை அதிர்ச்சியடையச் செய்த நிலையில், அதிகாரிகளின் இந்த நடத்தை மீது நெட்டிசன்கள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கோவை சூலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த 21ஆம் தேதி காணாமல் போனதாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், கண்ணம்பாளையம் பகுதியில் குளக்கரையில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் கொண்டு மேற்கொண்ட விசாரணையில் கார்த்திக், மோகன்ராஜ் என்ற 2 பேரைப் பிடித்தனர்.
இரண்டு பேரிடமும் மேற்கொண்ட விசாரணையில், சிறுமியின் அண்டை வீட்டில் வசிக்கும் 33 வயது இளைஞர் கார்த்தி என்பவர் சிறுமியை கடத்தி சென்று கொலை செய்தது வாக்குமூலம் மற்றும் சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியானதாக காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கார்த்திக்கு உதவியதாக இருந்த அவரது நண்பர் மோகன்ராஜ் என்பவரையும் கைதுசெய்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இதனையடுத்து உறவினர்களின் நீண்ட நேர போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
மேலும், குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தான் கொலை செய்யப்பட்டுள்ளதாக கோவை மேற்குமண்டல ஐஜி உறுதிப்படுத்தினார்.
இந்தசூழலில் கோவை மேற்குமண்டல ஐஜி உள்ளிட்ட காவல் அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பில் பேசுவதற்கு முன் சிரித்து கொண்டிருந்தது நேரலையில் ஒளிபரப்பானது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், காவல் அதிகாரிகளின் நடத்தையை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமையை நினைத்து நாடே அதிர்ச்சியில் இருக்கும்போது எப்படி பொறுப்பே இல்லாமல் சிரித்துகொண்டிருக்க முடிகிறது என பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர்.
