பெருந்தலைவர் காமராஜருக்கு அவருடைய இறுதி நாட்களில் ஏசி வசதி அவசியமாக இருந்தது என திமுக எம்பி திருச்சி சிவா பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், காமராஜர் ஏசி பயன்படுத்தினாரா இல்லையா? திருச்சி சிவா பேசியது உண்மைதானா என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
தமிழ்நாடு கண்ட பெருந்தலைவரான காமராஜர் தொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமாகிய திருச்சி சிவா தெரிவித்த ஒரு கருத்து பெரும் சர்ச்சையை உருவாக்கியது. “பெருந்தலைவர் காமராஜருக்கு அவருடைய இறுதி நாட்களில் ஏசி வசதி அவசியமாக இருந்தது. ஏசி இல்லாத அறையில் தூங்கினால், உடம்பில் அலர்ஜி உண்டாகிவிடும் சூழலில் இருந்தார். இதை உணர்ந்த கலைஞர் தன்னுடைய ஆட்சிக்கு எதிராக காமராஜர் பேச சென்ற இடங்களிலும்கூட அவர் தங்கிய அரசினர் பயணியர் விடுதிகளில் ஏசி வசதி செய்து கொடுத்தார். இப்படி தன்னுடைய அரசியல் எதிரிகள் மத்தியிலும்கூட அன்பு பாராட்டியவர் கலைஞர்” என்று பேசினார் சிவா.
இது காங்கிரஸாரிடம் கடும் கொந்தளிப்பை உண்டாக்கியது. எவ்வளவோ தியாகங்களை செய்தவர் காமராஜர். தங்களுடைய தலைவரை உயர்த்தி பேசுவதற்காக காமராஜரை இழிவுபடுத்துவதா என்று வரிசையாக கண்டனம் தெரிவிக்கலானார்கள். காங்கிரஸ் தலைவர் பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் என்று பலரும் கண்டனம் தெரிவிக்க, “திமுகவினரின் கட்டுக்கதைகளால் வீழ்த்தப்பட்டார் காமராஜர்” என்று எதிர்ப்பின் உச்சத்துக்குச் சென்றார் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி.
இதனூடாக காமராஜர் உண்மையாகவே ஏசியைப் பயன்படுத்தினாரா, இல்லையா; திருச்சி சிவா பொய்யாக ஏதும் பேசினாரா, ஏன் பேசினார் என்று பொதுவெளியில் எழுந்த கேள்வியை புதிய தலைமுறை ஆய்வு செய்தது. நமக்கு கிடைத்த விடை இதுதான். காமராஜர் ஏசியை பயன்படுத்தினார்.
காமராஜருடன் கால் நூற்றாண்டு காலம் பயணித்தவர் அவருடைய அணுக்க உதவியாளர் வைரவன். அவர் எழுதியுள்ள நூல் காமராஜருடன் கால் நூற்றாண்டு காலம். அந்த நூலில் காமராஜர் வீட்டில் குளிர் சாதன வசதி இருந்ததை அவர் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ஆய்வு செய்து ஒரு பெரும் நூலை எழுதியவர் கோபண்ணா. பழுத்த காங்கிரஸ்காரரும், காமராஜர் மீது பெரும் மதிப்பும் கொண்டவரான கோபண்ணா 2021இல் இந்து தமிழ் நாளிதழில் காமராஜர் மறைந்த நாளை நினைவுகூர்ந்து ஒரு கட்டுரை எழுதியுள்ளார். காமராஜரின் உதவியாளர் வைரவன் சொன்ன தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள இந்தக் கட்டுரையில் காமராஜர் மறைந்த தருணத்தை கோபண்ணா குறிப்பிடுகிறார். அக்டோபர் 2, காந்தி பிறந்த நாளன்று இயல்பாகவே இருந்தார். அன்று காலை தன்னைச் சந்திக்க வந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். பிற்பகல் 1.30 மணிக்கு அவர் வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டுத் தூங்கப் போனார். மாலை சுமார் 3.05 மணி அளவில் உடம்பு முழுவதும் வியர்த்துவிட்டது.
அந்த அறையில் குளிர்சாதனப் பெட்டி இயங்கிக்கொண்டிருந்த நிலையிலும் அவரது உடம்பு வியர்த்திருந்தது. காமராஜர் தமது உதவியாளர் வைரவனை அழைத்து, மருத்துவர்களைக் கூப்பிடும்படி கூறினார். உடனே, மருத்துவர் சவுரிராஜனுக்கும் மருத்துவர் ஜெயராமனுக்கும் தொலைபேசியில் விவரம் தெரிவிக்கப்பட்டது. பிறகு, காமராஜரின் உடம்பு சில்லிட்டிருந்ததால் உடம்பைத் துடைத்து, போர்வையால் போர்த்திவிட்டு, அறையிலிருந்து வைரவன் வெளியேறியபோது, டாக்டர்கள் வந்தால் தன்னை எழுப்பும்படி கூறிய காமராஜர், “விளக்கை அணைத்துவிட்டுப் போ” என்று கூறினார். 3.15 மணிக்கு வந்த மருத்துவர் சவுரிராஜன் காமராஜரின் உடல்நிலையை அவசர அவசரமாகப் பரிசோதித்துக்கொண்டே, “ஐயோ... பெரியவர், நம்மை விட்டுப் பிரிந்துவிட்டாரே” என்று வீறிட்டு அழுதார். தொடர்ந்து வந்த மருத்துவர்கள் ஏ.எல்.அண்ணாமலையும் ஜெயராமனும் உடலைப் பரிசோதித்துப் பார்த்து, உயிர் பிரிந்ததை உறுதிப்படுத்தினார்கள்.
காமராஜர் ஏசி பயன்படுத்தியதையும் அவருக்கு இறுதி நாட்களில் ஏசி அவசியமாக இருந்ததையும், இந்த விஷயத்தில் காமராஜர் மீது தான் அக்கறை கொண்டிருந்ததையும் முன்னாள் முதல்வர் கருணாநிதியும் ஏற்கெனவே எழுதியுள்ளார். காமராஜர் பிறந்த நாளை ஒட்டி, 2013 ஜூலை 15 அன்று அவர் வெளியிட்ட முகநூல் நினைவஞ்சலியில் திருச்சி சிவா குறிப்பிட்டுள்ள அதே விஷயத்தை கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
இதையெல்லாம் தாண்டி சென்னையில் காமராஜர் வாழ்ந்து மறைந்த நினைவில்லத்தில் ஏசி இயந்திரம் உள்ளதை அங்கு எடுக்கப்பட்ட படங்கள், காணொளிகள் வெளிப்படுத்துகின்றன.
ஆக, காமராஜர் தன்னுடைய இறுதி நாட்களில் ஏசி வசதியை பயன்படுத்தினார் என்பது உறுதியாகிறது. ஆனால், ஏன் அவர் ஏசியைப் பயன்படுத்த கூடாது? இரு பிரதமர்களை உருவாக்கிய பெருந்தலைவர் அவர். ஒருகாலத்தில் ஒட்டுமொத்த இந்தியாவையும் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக கட்டியாண்டவர். தமிழ்நாடுக்காகவும், தமிழர்களுக்காகவும் தன்னுடைய முழு வாழ்வையும் ஒப்பளித்தவர். தன்னுடைய வாழ்வில் 10 ஆண்டு காலத்தை சிறையில் செலவிட்டவர். தனக்கென்று ஒரு குடும்பமோ, சொத்துகளோ சேர்க்காதவர். அப்பேர்ப்பட்ட பெரும் தியாகி தன்னுடைய உடல்நலன் சார்ந்து இறுதி நாட்களில் ஏசியைப் பயன்படுத்தியதில் என்ன தவறு? இத்தகு விஷயங்கள் ஒருபோதும் அந்த மாபெரும் தலைவரின் பெருமையை சிதைக்க முடியாது என்பதே உண்மை!