தேர்தல் தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி, திடீரென திமுக கூட்டணியை முறித்துக்கொண்டுபோய் தவெகவுடன் இணைந்தது. இதனால் திமுகவினர் கடும் அதிருப்தி அடைந்தனர். இந்தச் சூழலில், 2024 பிப்ரவரி 17 முதல் பதவியில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, இன்னும் ஆறு மாத காலம் பதவி உள்ளபோதும், மாநிலத் தலைவர் பதவியில் தொடர மாட்டேன் என்று அறிவித்துள்ளார்.
செய்தியாளர் ; m.மீரா
தமிழகச் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக 6 மாதங்களாகவே திமுக-காங்கிரஸ் இடையேயான உறவில் இணக்கமான சூழல் இல்லை. காங்கிரஸில் பெரும்பாலானோர் தவெகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று விரும்பினர். ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, மூத்த தலைவர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் மேற்கொண்ட தீவிர முயற்சியினால் திமுகவும்-காங்கிரசும் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டன. தேர்தலில் திமுக கூட்டணி தோல்வியடைந்ததையடுத்து உடனடியாக உறவை முறித்துக்கொண்டு தவெகவுடன் கூட்டணி அமைத்தது காங்கிரஸ் கட்சி. நீண்டகால கூட்டணியை சுமுகமாக முடிக்காமல், மனக்கசப்பு ஏற்படும் வகையில் முறிக்கப்பட்டதாக விமர்சனமும் முன்வைக்கப்பட்டது.
இதனால் காங்கிரஸ் கட்சியினரை திமுகவினர் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றனர். இதுபோன்ற சூழலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும் என காங்கிரஸ் தேசிய தலைமையிடம் மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள செல்வப்பெருந்தகை வலியுறுத்தியதாகக் கூறப்பட்டது.
2024 பிப்ரவரி 17ஆம் தேதி முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக (TNCC) நியமிக்கப்பட்ட செல்வப்பெருந்தகையின் பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் ஆறு முதல் ஏழு மாதங்கள் உள்ளது. இந்த நிலையில் இனிமேல் மாநிலத் தலைவர் பதவியில் தொடர மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ”தலைவர் பதவியில் இருந்து விலகுவதில், தாம் உறுதியாக இருக்கிறேன். காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர் மற்றும் ஜோதிமணி குறித்து மனம் திறப்பேன்” என்றும் கூறியுள்ளார்.
மேலும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பெங்களூருவில் சந்தித்தது குறித்து செல்வப்பெருந்தகை, ”தேர்தல் முடிந்தவுடன் நான் மாநில தலைவராக தொடர்வதற்கு வாய்ப்பு இல்லை. வேறு ஒருவர் அந்தப் பணியை மேற்கொள்வார் என்று ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன். அதனை என்னுடைய தலைமைக்கும் சொல்லியிருக்கிறேன் அதற்கு அவர் கொஞ்சம் பொறுமையாக இருங்கள், நான் கூப்பிடுகிறேன் என்று கூறியிருக்கிறார்” என்றார்.