’59 ஆண்டுக்கு பிறகு காங்கிரஸ் அமைச்சர்கள்; விஜய் சொன்னதை செய்துவிட்டார்’ - மாணிக்கம் தாகூர்
2026 தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்றும் முழு எண்ணிக்கையை எட்டாத தவெக, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், ஐயூஎம்எல் ஆதரவுடன் ஆட்சியமைக்கிறது. திமுகவின் “ஆட்சியில் பங்கு இல்லை” என்ற நிலைப்பாட்டை மக்கள் மறுத்து, கூட்டணி கட்சிகளுக்கு அதிகார பங்கு வழங்கும் புதிய அரசியல் வரலாறு எழுதப்படுகிறது என மாணிக்கம் தாகூர் குறிப்பிடுகிறார்.
தமிழக சட்டப்பேரவையின் 13-வது முதல்வராக தவெக தலைவர் விஜய் கட்சி ஆரம்பித்து சுமார் 2 ஆண்டுகளிலேயே அரியணை ஏறியிருக்கிறார். மே-4 ஆம் தேதி 2026 தேர்தலுக்கான முடிவுகள் வெளியான சூழலில், தனிப்பெரும்பான்மையாக 108 தவெக வெற்றி பெற்றிருந்தாலும், ஆட்சியமைக்க தேவையான 118 என்ற இடங்கள் கிடைக்காத சூழலில் திமுக கூட்டணியில் இருந்து தேர்தலை சந்தித்து 5 இடங்களில் வென்ற காங்கிரஸ் முதல் கட்சியாக தவெகவுக்கு ஆதரவளித்தது. தொடர்ந்து, விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் ஆதரவால் தவெக ஆட்சியமைத்திருக்கிறது.
விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெகவின் முதல் மாநாட்டிலேயே, தங்களுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு மற்றும் அதிகாரத்தில் பங்கு என்ற கொள்கையை கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்தும் எந்தக் கட்சிகளும் தவெகவுடன் கூட்டணி வைக்காத நிலையில், தனித்தே களம் கண்டது தவெக. எனினும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கொள்கை திமுக கூட்டணியில் குழப்பத்தையே ஏற்படுத்தியது. திமுக கூட்டணியில் முக்கியக் கட்சியான காங்கிரஸின் பல முக்கிய நிர்வாகிகள் அதிகாரத்தில் பங்கு என்பதை திமுகவிடம் வலியுறுத்தி வந்ததுடன், பொதுவெளிகளிலும் பேசி வந்தனர். இது இருதரப்புகளுக்கும் இடையே சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸின் மூத்த தலைவர்களின் அழுத்தத்தின் பேரால், திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தது.
இந்தசூழலில் தான், யாரும் எதிர்பார்க்காத வகையில், திமுக 59 இடங்களே பெற்று தவெகவிடம் தோல்வியைத் தழுவியது. அதேசமயம், தவெகவுக்கும் ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாத சூழலில், காங்கிரஸ் தேர்தல் முடிவுகள் வெளியான 2-வது நாளே (மே-6) தவெகவுடன் கூட்டணி வைத்திருக்கிறது. காங்கிரஸுடன் மேலும், பல கட்சிகளின் ஆதரவுடன் தவெக தலைவர் முதல்வராக பதவியேற்றிருப்பதுடன், நேற்றைய முன்தினம் சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையையும் நிரூபித்திருக்கிறது தவெக.
தவெகவில் இதுவரை 9 அமைச்சர்கள் பதவியேற்றிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் தரப்படுமா? எத்தனை அமைச்சரவை இடங்கள் தரப்படும் என்ற கேள்விகள் தமிழக மக்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதேசமயம், அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி, சி.வி சண்முகம் தரப்பு தவெகவுக்கு ஆதரவு கொடுத்திருக்கும் நிலையில், அவர்களும் அமைச்சரவையில் பங்கு கேட்பதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் தான், 59 ஆண்டுகளுக்குப் பிறகு, கதர் அணிந்த இரு காங்கிரஸ் அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம்பிடிக்கிறார்கள் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ”2026 தேர்தலுக்கு முன்பே திமுக “ஆட்சியில் பங்கு தமிழகம் ஏற்காது என்று வெளிப்படையாக அறிவித்தது. அதற்கு மக்கள் தங்களின் தீர்ப்பை வழங்கிவிட்டார்கள். தமிழக மக்கள் ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்று கூறிவிட்டனர். ஒரு புதிய வரலாறு எழுதப்படுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு என்றும் அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்று கூறிய முதல்வர் விஜய் தனது வாக்குறுதியை காப்பாற்றியுள்ளார். தற்போது, 59 ஆண்டுகளுக்குப் பிறகு, கதர் அணிந்த இரு காங்கிரஸ் அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம்பிடிக்கிறார்கள். என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களுக்கு இது உணர்ச்சிபூர்வமான, வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். 36% கமிஷன் அரசியலிலிருந்து, ஊழல் இல்லா ஆட்சிக்குத் தமிழகத்தை கொண்டு செல்ல வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

