வாஜ்பாய் - கருணாநிதி - முக ஸ்டாலின் x
தமிழ்நாடு

வாஜ்பாய் 100 | “நாட்டின் மதச்சார்பின்மை பண்பை பேணிக்காத்தவர்” - முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

முன்னாள் பிரதமரும், பாரதிய ஜனதா கட்சியை நிறுவியவர்களில் ஒருவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்த நாள் இன்று.

PT WEB

வாஜ்பாய் - இந்திய அரசியலில் அழுத்தமான கால் தடத்தைப் பதித்த தலைவர்களில் முக்கியமானவர். “நாட்டின் பிரதமர் பதவியை வாஜ்பாய் ஒரு நாள் அலங்கரிப்பார்” என்று நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவால் புகழப் பெற்றவர் வாஜ்பாய். பிரதமராக பதவிக்காலம் முழுவதையும் நிறைவு செய்த காங்கிரஸ் கட்சியைச் சாராத முதல் நபர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் வாஜ்பாய்.

20 வயதில் தொடங்கிய வாஜ்பாயின்  அரசியல் பயணம்..!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் (KRISHNA BIHARI VAJPAYEE) கிருஷ்ண பிகாரி வாஜ்பாய் - (krishna devi) கிருஷ்ணா தேவி தம்பதிக்கு மகனாக 1924ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி பிறந்தார் வாஜ்பாய். இவரது பொது வாழ்க்கை ஈடுபாடுகள் தொடங்கிய ஆண்டு 1944ஆகும். ஆர்ய சமாஜிலும் ஆர்எஸ்எஸ்சிலும் இணைத்துக்கொண்டு துடிப்புடன் பணியாற்றி வந்தார் இளைஞர் வாஜ்பாய். பின்னர் (SYAMA PRASAD MUKHERJEE) சியாமா பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபாத்யாயா உள்ளிட்டோருடன் இணைந்து (BHARATIYA JANA SINGH) பாரதிய ஜன சங் என்ற அமைப்பைத் தொடங்கினார்.

atal bihari vajpayee

அவசர நிலைக்குப் பின்னர், தனது நீண்டகால நண்பர்களான பைரோன் சிங் ஷெகாவத், எல்.கே அத்வானி ஆகியோருடன் சேர்ந்து, 1980ல் பாரதிய ஜனதா கட்சியைத் தொடங்கினார். பாரதிய ஜனதா கட்சியின் முதல் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் அவர். 1984 நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு இரண்டு இடங்கள் மட்டுமே கிடைத்தன. அதில் வென்ற இருவரில் ஒருவர் வாஜ்பாய். இருப்பினும், அவரது குரல் நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்தது. நயமிக்க உரைகள் மூலம் சிறந்த நாடாளுமன்ற வாதி என நிரூபித்தார்.

பிரதமரான 13வது நாளில் பதவி விலகல்..

1996ம் ஆண்டு நடந்த 11ஆவது மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா தனிப்பெரும் கட்சியாக வென்ற நிலையில் பிரதமராகப் பதவியேற்றார் வாஜ்பாய். ஆனால், பெரும்பான்மையை திரட்ட இயலாத நிலையில் பதவியேற்ற 13ஆவது நாளே பதவி விலகினார்.

atal bihari vajpayee

அதன் பின்னர் 1998ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வென்றது, மீண்டும் பிரதமரானார் வாஜ்பாய். இம்முறை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தார்.

ஆனால் 13 மாதங்களில் ஆட்சி கவிழ்ந்தது, 1999ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வென்று மீண்டும் வாஜ்பாய் பிரதமரானார். இம்முறை 5 ஆண்டு காலமும் அவர் பிரதமராக இருந்தார்.

100வது பிறந்தநாளுக்கு முக ஸ்டாலின் மரியாதை!

வாஜ்பாயின் 100வது பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில், தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு மரியாதை நிமித்தமாக பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

அந்தப்பதிவில் முதல்வர் முக ஸ்டாலின், “முன்னாள் பிரதமர் திரு. அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் நூறாவது பிறந்தநாளில் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக அவர் ஆற்றிய பங்களிப்பினையும், நமது தலைவர் கலைஞர் அவர்களுடன் அவர் கொண்டிருந்த நட்புறவினையும் நினைவுகூர்கிறோம்.

வலதுசாரிக் கருத்தியல் கொண்டவராக இருந்தாலும், பிரதமர் பொறுப்பில் இருந்தபோது நாட்டின் மதச்சார்பின்மைப் பண்பை அவர் பேணிக்காத்தார். அவரது வாழ்வும் பணியும் நிலைத்து நிற்கும்!” என்று பதிவிட்டுள்ளார்.