பாக்ஸிங் டே டெஸ்ட் | பயிற்சிக்கு இந்தியாவுக்கு பழைய ஆடுகளம்.. ஆஸி.க்கு புதிய ஆடுகளம்.. புது சர்ச்சை
செய்தியாளர் சந்தானகுமார்
கிறிஸ்துமஸ்-க்கு மறுநாள் நடைபெறும் போட்டி பாக்சிங் டே டெஸ்ட் என்றழைக்கப்படுகிறது. அவ்வாறான போட்டிக்கு தயார் நிலையில் இருக்கின்றன இந்திய - ஆஸ்திரலிய அணிகள். 4 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி கண்டுள்ளன. ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது. இந்தநிலையில் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இரு அணிகளும் மெல்பர்ன் மைதானத்தில் களம் காண்கின்றன. 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தப்போட்டியை கண்டுகளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியை பொறுத்தவரை முதல் டெஸ்ட்டில் வெற்றிக்கனியை பறித்தது. பும்ராவின் அனல்வேகப்பந்து வீச்சு மற்றும் ஜெய்ஸ்வாலின் அதிரடி பேட்டிங் இந்த வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. குறிப்பாக பேட்டிங் பொறுத்தவரை கே.எல்.ராகுல், நிதிஷ் குமார் ரெட்டியை தவிர மற்ற வீரர்கள் ரன்களை குவிக்கத் தடுமாறி வருகின்றனர். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து அஸ்வின் ஓய்வு பெற்றுள்ள நிலையில், அவருக்கு மாற்று வீரராக மும்பையை சேர்ந்த இளம் ஆல் ரவுண்டர் தனுஷ் கோட்டியான் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மற்றொருபுறம் ஆஸ்திரேலியா அணியில், தொடக்க ஆட்டக்காரராக இருந்த mcsweeney அணியில் இருந்து நீக்கப்பட்டு 19 வயதான Sam Konstas தேர்வு செய்யப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் HAZLEWOOD காயம் காரணமாக விலகி இருப்பது பின்னடைவு என்றாலும், மெல்பர்ன் மைதானத்தில் BOLAND கடந்த காலங்களில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை 9 முறை பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளன. அதில் 5 முறை ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. 2 முறை இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக நடைபெற்ற 2 போட்டிகளில்தான் இந்தியா வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
MCG மைதானத்தில் இரண்டு அணிகளும் பயிற்சி மேற்கொள்ளும் இடத்தில் இந்தியாவிற்கு பழமையான பயிற்களத்தை வழங்கிவிட்டு, ஆஸ்திரேலியாவிற்கு புதிய ஆடுகளத்தை வழங்கி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாக்ஸிங் டே டெஸ்ட் தொடரை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும், இந்திய அணியின் முன்னணி வீரராக இருக்கக்கூடிய ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இந்த போட்டியில் எப்படி விளையாட உள்ளார்கள் என்பதுதான் மிக முக்கியமான பார்வையாக இருக்கிறது.