Tamil Nadu Assembly election x page
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் உயர்ந்ததா வாக்குப்பதிவு? 25 ஆண்டுகளாக நிலை இதுதான்.. புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்குச் சதவீதம் வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ள நிலையில், உண்மையில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா, இல்லையா என்பது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு.

Praveen Joshva L

நடந்து முடிந்த 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவாக 85.15 சதவீத வாக்குகள் பதிவாகி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள சமூகவலைத் தள பதிவில், இதுவரை பெருமளவிலான குறிப்பிட்ட சதவிகித வாக்குகள், வாக்குச்சாவடி பக்கமே வராமல் இருந்தன என்றும், ஆனால், 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு, தமிழகத் தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வரலாற்று நிகழ்வாகப் பதிவாகி உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், 85 சதவீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்நாடு காணாத ஒன்று என்றும், வாக்குச்சாவடிகள் எங்கும் கோயில்களில் காணப்படும் கூட்டம்போல, குடும்பம் குடும்பமாகக் குழந்தை குட்டிகளுடன் வந்து வாக்களித்ததைக் கண்டு வியக்காதோர் எவரும் இருக்கவே வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.

அதேபோல சமூக வலைத்தளங்களில் வாக்குச் சதவீதம் கூடியுள்ளது குறித்து பெரியளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையத்தின் தரவுகள் அடிப்படையில், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 4 கோடியே 58 லட்சம் வாக்குகள் பதிவானது.

இந்த முறை, அதாவது 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 4 கோடியே 88 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அந்த வகையில், கடந்த தேர்தலைவிட இந்த முறை சுமார் 30 லட்சம் வாக்குகள் அதிகம் பதிவாகியுள்ளது. அதே நேரம் கடந்த 25 ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதையே தேர்தல் ஆணைய தரவுகள் கூறுகின்றன. தமிழ்நாட்டில் கடந்த 1996-ஆம் ஆண்டு தேர்தலில் 2 கோடியே 71 லட்சம் வாக்குகள் பதிவான நிலையில், அதன்பின்னர் 2001-ஆம் ஆண்டு 2 கோடியே 80 லட்சம் வாக்குகள் பதிவாகின.

ஆனால், அதன் பின்னர் 2006 தேர்தலில் 2001-ஆம் ஆண்டு தேர்தலைவிட 50 லட்சம் வாக்குகள் அதிகம் பதிவானது. இது அப்படியே தொடர்ந்து, 2011 தேர்தலில் 45 லட்சம் வாக்குகள் அதிகமாகவும், 2016 தேர்தலில் 64 லட்சம் வாக்குகளும் அதிகம் பதிவானது. 2021 சட்டமன்றத் தேர்தலில் கொரோனா பாதிப்பு இருந்த நிலையிலும், அந்த தேர்தலிலும் 2016 தேர்தலைவிட 29 லட்சம் வாக்குகள் கூடுதலாக பதிவானது.

அந்த வகையில், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலைவிட தற்போது 30 லட்சம் வாக்குகள் அதிகம் பதிவாகியுள்ளது. இதனால் பலரும் சொல்வதுபோல வாக்கு எண்ணிக்கை அசாதாரண அளவில் உயரவில்லை என்பதும், கடந்த 25 ஆண்டுகளாகத் தேர்தலுக்குத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை உயர்ந்து வருவதைப்போல சராசரி அளவாகவே வாக்கு எண்ணிக்கை இந்த முறையும் உயர்ந்துள்ளது என்பதும் தெரியவருகிறது.

SIR பணிகளின் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த முறையைவிட 74.07 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டன. இதன் காரணமாக கடந்த முறையைவிட இந்த முறை வரலாறு காணாத வாக்குச் சதவீதம் பதிவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.