திருமாவளவன், ஜிடி. நாயுடு மேம்பாலம் pt web
தமிழ்நாடு

”சாதியை வளர்ப்பதாக இருக்காது என நம்புவோம்”- ஜி.டி.நாயுடு மேம்பாலம் குறித்து திருமாவளவன்!

’’மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு என பெயர் வைப்பது என்ற தமிழ்நாடு அரசின் முடிவு, சாதியை வளர்க்கும் நடவடிக்கையாக இருக்காது’’ என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

PT WEB

தமிழ்நாட்டில் ஊர்கள் மற்றும் தெருக்களின் பெயர்களில் சாதி பின்னொட்டுகளை நீக்கி அக்டோபர் 8-ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. சாதிய முன்னொட்டுகளைக் கொண்ட பெயர்களை கட்டாயம் மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது. தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், ஊர் மற்றும் தெருபெயர்களில் உள்ள சாதிப்பின்னொட்டுக்களை நீக்கும் அரசாணையை வரவேற்று விசிக தலைவர் திருமாவளவன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

திருமாவளவன், மு.க. ஸ்டாலின்

தொடர்ந்து, அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, ஜி.டி. நாயுடு மேம்பாலம் என்ற பெயரில் சாதிப் பெயர் இருப்பதாக கேட்கின்றீர்கள். இனி வருங்காலத்தில் எந்த பெயரும் சாதிப் பெயரில் இருக்கக் கூடாது என்பது கொள்கை முடிவு. கடந்த காலங்களில் சாதி அடிப்படையில் சில தலைவர்களின் பெயர்கள் புழக்கத்திற்கு வந்து அவை நிலை பெற்றிருக்கக் கூடும். சாதிப் பெயருடன் அடையாளப்படுத்தப்பட்டதால் அவர்கள் சாதிபார்த்தார்கள் என கூற முடியாது. உதாரணமாக சாதி ஒழிப்பை வலியுறுத்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கிருஷ்ண ஐயர் , மார்க்சிய தலைவர் இஎம்எஸ் நம்பூதிரிபாட் உள்ளிட்டோர் பெயர்களில் சாதி இருந்தது. ஆனால், அவர்கள் சாதி ஒழிப்பு அரசியலை முன் எதிர்த்தார்கள்.

சாதி ஒழிப்பு அரசியல் வலுப்பெரும் முன் சிலர் சாதி பெயருடன் அழைக்கப்பட்டிருக்கக் கூடும். அதை நாம் அழித்து , புதிய தலைமுறையினருக்கு அவர்களை அடையாளப்படுத்தாமல் விட்டு விடக்கூடாது. அதே அடையாளத்தோடு அவர்களை குறிப்பிட்டுக் கூறினால் சாதியை வளர்க்கிறோம் என்று அர்த்தம் இல்லை. இனி அவற்றை பயன்படுத்தாமல் தவிர்க்கலாம். பெரியார் உயிரோடு வாழ்ந்த காலத்திலேயே நாயக்கர் என்ற பெயரை உதறி தள்ளினார். தொடக்கத்தில் ராமசாமி நாயக்கர் என்றுதான் அவர் அழைக்கப்பட்டார். எனவே இதை அரசியலாக்க தேவையில்லை. அரசு ஜி.டி நாயுடு எனப் பெயர் வைத்தால் மட்டுமே மக்களிடையே அடையாளப்படுத்த முடியும் என முடிவெடுத்திருக்கிறது. எனவே "அது சாதியை வளர்ப்பதற்கானதாக இருக்காது என்று நாம் நம்புவோம்" என தெரிவித்தார்.