ஜன் சுராஜ் கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்... கட்சி மாறிய 17 பேருக்கு வாய்ப்பு!
பிகார் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அனைத்து சமூகங்களின் பிரதிநிதித்துவத்தை உறுபடுத்தி ஜன் சுராஜ் கட்சி முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்திருந்த நிலையில், தற்போது இரண்டாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறது.
தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்து அரசியல் தலைவராக மாறியுள்ள பிரசாந்த் கிஷோரின் அரசியல், நாடு முழுவதும் கவனம் ஈர்த்து வருகிறது. இந்நிலையில்தான், தனது ஜன் சுராஜ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, பிகார் அரசியலில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தார். வழக்கமான அரசியல் கட்சிகளைப் போலல்லாமல், ஜன் சுராஜ் வெளியிட்டுள்ள 51 பேர் கொண்ட முதல் பட்டியலில், தொழில்முறை வல்லுநர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. இது பிகார் அரசியலில் திறமை மற்றும் தூய்மையான ஆளுமை என்ற புதிய அத்தியாயத்தை எழுத கிஷோர் முயல்வதைச் சுட்டிக்காட்டியது.
தலைசிறந்த கல்வியாளரும், பாட்னா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான KC சின்ஹா, குமஹரார் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். பாட்னா உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும், பிகாரின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாகவும் பணியாற்றிய அனுபவம் கொண்ட ஒய்.பி கிரி, மாஞ்சி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டார்.
கிராமப்புற சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர் ஒருவர், முசாஃபர்பூர் தொகுதியில் களம் காண்கிறார். இதுமட்டுமின்றி, ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரிகளான RK மிஸ்ரா மற்றும் ஜெய் பிரகாஷ் சிங், முன்னாள் முதல்வர் பாரத ரத்னா கர்பூரி தாக்கூரின் பேத்தி ஐகிருதி தாக்கூர் மற்றும் திருநங்கை வேட்பாளர் ப்ரீத்தி கின்னார் ஆகியோருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வேட்பாளர் பட்டியலில், மிகவும் பின்தங்கிய வகுப்பினருக்கு (EBC) 17 இடங்களும், இஸ்லாமியர்களுக்கு 7 இடங்களும் வழங்கப்பட்டிருக்கிறது. பிரசாந்த் கிஷோர், தான் போட்டியிட விரும்பிய கர்கஹர் தொகுதியில், போஜ்புரி பாடகர் ரிதேஷ் ரஞ்சன் பாண்டேயை களமிறக்கியிருக்கிறார்.
இரண்டாவது வேட்பாளர் பட்டியல்
இந்நிலையில், 19 தனித் தொகுதிகளை (18 sc மற்றும் 1 st) உள்ளடக்கிய 65 வேட்பாளர்களைக் கொண்ட ஜன் சுராஜ் கட்சியின் இரண்டாவது வேட்பாளர் பட்டியலை நேற்று பிரசாந்த் கிஷோர் வெளியிட்டார். இந்தப் பட்டியலில் மாநிலத்தில் பல்வேறு பிரிவுகளுக்கு அவர்களின் மக்கள்தொகை விகிதத்தில் பிரதிநிதித்துவம் வழங்குவதற்கான பிரசாந்த் கிஷோரின் உறுதிமொழியின்படி, இரண்டாவது பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து (EBC) 14 வேட்பாளர்கள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து (OBC) 10 வேட்பாளர்கள், பொதுப் பிரிவில் இருந்து 11 வேட்பாளர்கள் மற்றும் முஸ்லீம் மதத்தைச் சார்ந்த 14 வேட்பாளர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், பொது தொகுதிகளில் திறமையான பட்டியல் சாதி (SC) மற்றும் பட்டியல் பழங்குடியின (ST) வேட்பாளர்களை நிறுத்துவதாக அறிவித்த வாக்குறுதியின்படி, பொதுத் தொகுதியும் பிகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஹர்னாட் சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஒரு பட்டியல் இன வேட்பாளரை நிறுத்தியுள்ளது ஜன் சுராஜ்.
தொடர்ந்து, தேஜஸ்வி யாதவின் கோட்டையான ராகோபூர் தொகுதியில் பிரசாந்த் கிஷோர் போட்டியிடுவார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வரும் நிலையில் இரண்டாம் வேட்பாளர் பட்டியலிலும் ராகோபூர் தொகுதி இடம்பெறவில்லை. மேலும், ஜன் சுராஜ் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலைப் போலவே இரண்டாவது பட்டியலிலும் அனைத்து சமூக மக்களுக்கான பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருகிறது.
கட்சி மாறிவர்களுக்கும் வாய்ப்பு
தொடர்ந்து, இந்தப் பட்டியலில் கட்சி மாறிய 17 பேருக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, நர்பட்கஞ்சிலிருந்து நான்கு முறை பாஜக எம்.எல்.ஏ.வாக இருந்த ஜனார்தன் யாதவ், கடந்த செப்டம்பர் மாதத்தில் பாஜகவில் இருந்து ராஜினாமா செய்து ஜன் சுராஜ் கட்சியில் இணைந்த நிலையில், அவருக்கு சீட் கிடைத்துள்ளது. இதையடுத்து, நான்கு முறை பாஜக எம்.பி.யாக இருந்த பக்சர் லால்முனி சௌபேயின் மகன் ஹேமந்த் சௌபே, செயின்பூரில் போட்டியிடவிருக்கிறார். இவர், ஆகஸ்ட் மாதம் ஜன் சுராஜ் கட்சியில் சேர்ந்திருந்தார். தொடர்ந்து, நான்கு முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த சத்யேந்திர ஹஸ்ரா சோன்வர்ஷாவிலிருந்து போட்டியிடுகிறார். இவ்வாறு மற்ற கட்சியிலிருந்து விலகி ஜன் சுராஜ் கட்சியில் சேர்ந்த 17 பேருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குற்றப்பிண்ணனி கொண்டவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு:
ஜன் சுராஜ் கட்சியின் இரண்டாவது வேட்பாளர் பட்டியலில், கொலை முயற்சி வழக்குக்காக சிறையில் அடைக்கப்பட்ட 47 வயதான நாஸ் அகமது, கேசாரியா தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். கொலைமுயற்சி வழக்கு குற்றத்துக்காக ஆறு மாதம் சிறையில் இருந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜாமீனில் வெளிவந்திருக்கும் நிலையில், அவருக்கு ஜன் சுராஜ் கட்சியில் இருந்து போட்டியிட வாய்ப்பளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் கடந்த காலங்களில் பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவராக இருந்திருக்கிறார் என்று உள்ளூர்வாசிகள் தெரிவிப்பதாக செய்திகள் வெளியாவதும் குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராடிய வழக்கறிஞர்
1989 ஆம் ஆண்டு பகல்பூர் வகுப்புவாத கலவரத்தில் சுமார் ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக இலவசமாக பணியாற்றிய 74 வயதான அபய் காந்த் ஜா என்ற வழக்கறிஞர் ஜன்சுவராஜ் சார்பில் பாகல்பூரிலிருந்து களமிறக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து, இரண்டாவது வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டுப் பேசிய பேசிய பிரசாந்த் கிஷோர், “ அனைத்து சமூகங்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்குவதாக ஜன் சுராஜ் அளித்த வாக்குறுதிக்கு ஏற்ப இந்த பட்டியல் அமைந்துள்ளது. கட்சி அதன் மொத்த 243 பட்டியலில் அனைத்து சாதிகள் மற்றும் வகுப்புகளுக்கும் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும்" என்றும் கூறியிருக்கிறார்.
இவ்வாறு, எதிர்பாராத தேர்தல் வியூகங்கள் மூலம், பிகார் அரசியல் வரலாற்றில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர விரும்பும் பிரசாந்த் கிஷோர் தனது அரசியல் ஆட்டத்தை தொடங்கியுள்ளார்.