கரூர் சம்பவம் | சிபிஐக்கு மாற்றப்பட்டது ஏன்? நீதிபதிகள் சுட்டிக்காட்டிய 7 முக்கிய விஷயங்கள்!
கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு, தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. உத்தரவின் முழு விவரங்களும் தற்போது வெளியாகியிருக்கின்றன. அந்த உத்தரவில் வழக்கை சிபிஐக்கு மாற்றியதற்கான காரணங்கள் உள்ளிட்ட முக்கியமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கரூரில் கடந்த 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடத்திய தேர்தல் பரப்புரையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக அமைத்தது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழுவும் அமைக்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தமிழக வெற்றிக்கழகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. கடந்த வாரம் பரபரப்பான வாதங்கள் முன் வைக்கப்பட்ட நிலையில் இன்று இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சாரியா தலைமையிலான அமர்வு பிறப்பித்த இடைக்கால உத்தரவுகள், முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயரிழந்த துயர சம்பவம் நாடு முழுவதும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறிய நீதிபதிகள், இந்த சம்பவத்தின் தீவிரத்தை அறியாமல் காவல் உயர் அதிகாரிகள் ஊடகத்தில் தெரிவித்த கருத்துகள், நியாயமான விசாரணை நடைபெறுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடும் என்று தெரிவித்திருக்கின்றனர். அதனால், இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளனர்.
அதன்படி,
1. கடந்த மாதம் 27ம் தேதி நிகழ்ந்த துயரச் சம்பவம் தொடர்பாக கரூர் டவுன் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை சிபிஐயிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
2.தாமதமின்றி உயர் அதிகாரி தலைமையிலான சிபிஐ விசாரணைக் குழுவை அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
3. கரூர் எஸ்பி, கரூர் டவுன் காவல்நிலைய அதிகாரி மற்றும் உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு, முதலமைச்சர் அமைத்த ஒரு நபர் விசாரணை ஆணையம் ஆகியவை இந்த சம்பவம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் சிபிஐயிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
4. சிபிஐ-க்கு வழக்கு மாற்றப்பட்டிருப்பதால் சிறப்பு விசாரணைக் குழு மற்றும் ஒரு நபர் ஆணையம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
5. சிபிஐ விசாரணைக்கு தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
6. ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ராஸ்டோகி தலைமையிலான கண்காணிப்புக் குழுவை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டைச் சேராத ஆனால் தமிழ்நாட்டு பிரிவைச் சேர்ந்த ஐஜி அந்தஸ்திலான இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
7. இந்த வழக்கின் முதல்கட்ட முகாந்திரத்தின் அடிப்படையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்தரப்பில் பதில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தபின்னர் தேவையெனில் மேலதிக உத்தரவு பிறக்கப்படும் என நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.