நதிக்கரை அரசியல் Pt web
தமிழ்நாடு

தென்பெண்ணை நதிக்கரை அரசியல்.. ஆதிக்கம் செலுத்தும் பாமக, விசிக.. விஜயின் தாக்கம் என்ன?

தமிழ்நாட்டின் மிக முக்கிய எட்டு மண்டலங்களின் அரசியல் பின்னணியை, அப்பகுதி மக்களின் வாழ்வியல், பண்பாடு ஆகியவற்றுடன் அலசுகிறது நதிக்கரை அரசியல் பகுதி. அதன்படி தற்போது, தென்பெண்ணை நதிக்கரை அரசியலை பார்க்கலாம்.

PT WEB

கர்நாடக மாநிலத்தின் நந்தி மலையில் ‘தக்ஷிண பினாகினி’யாக உற்பத்தியாகி, தமிழகத்தின் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை வழியாகப் பாய்ந்து, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்கிறது தென்பெண்ணையாறு. சுமார் 432 கிலோமீட்டர் தூரம் பயணித்து, கடலூர் அருகே ‘கெடிலம்’ மற்றும் ‘தென்பெண்ணை’ என இரு கிளைகளாகப் பிரிந்து வங்கக்கடலில் கலக்கிறது.

Tenpennai River, Cuddalore

தமிழ்நாட்டின் இரண்டாவது நீளமான இந்த நதிக்கரையில், கற்காலப் பாறை ஓவியங்கள், டைனோசர் படிமங்கள் மற்றும் சோழர் கால அரண்மனை இடிபாடுகள் போன்றவை இருக்கின்றன. 1967-க்கு முன்னர் வரை தமிழகத்தின் பிற பகுதிகளைப் போலவே இந்த மண்டலத்திலும் காங்கிரஸ் பேரியக்கத்தின் செல்வாக்கு மிக வலுவாக இருந்தது. அதன் பின் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளும் மாறி மாறித் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தினாலும், இந்த மண்டலத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்கிறது.

அதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் தேமுதிகவுக்கும் கணிசமான செல்வாக்கு உள்ளது. வன்னியர், ஆதிதிராவிடர், மீனவர், உடையார், யாதவர், கொங்கு வேளாளர் எனப் பல்வேறு சமூகத்தவர்கள் இந்தப் பிராந்தியத்தில் செறிந்து வாழ்கின்றனர். குறிப்பாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வெற்றி வாய்ப்பைத் தீர்மானிப்பவர்களாக வன்னியர் மற்றும் ஆதிதிராவிடர் சமூகத்தவர்களே உள்ளனர்.

Anbumani & Ramadoss

கடலோரப் பகுதிகளில் மீனவ மக்களின் வாக்குகள் முக்கியமானவை. விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் சிறுபான்மையின மக்கள் கணிசமாக உள்ளனர். குறிப்பாகத் தென்பெண்ணை பாயும் கடலூர் மற்றும் சிதம்பரம் பகுதிகளில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் ஆதரவு திமுக கூட்டணிக்கு பெரிய பலம். அதேசமயம் வானூர் மற்றும் திண்டிவனம் தொகுதிகளில் அதிமுகவின் கோட்டைகள்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் திமுக கூட்டணியிலிருந்து விலகியது வன்னியர் சமூக வாக்குகளை ஒருங்கிணைப்பதில் திமுக அணிக்கு பின்னடைவை தரும். பாமக நிறுவனர் ராமதாஸ் தனியாக வேட்பாளர்களை நிறுத்துவது அதிமுக அணிக்கு செல்லும் வாக்குகளை பிரிக்கும். கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் சிறுபான்மையின மக்கள் மற்றும் மீனவ மக்களின் ஆதரவு திமுக அணிக்குத் தொடர்ந்து வலு சேர்த்துவருகிறது.

Vija's Vikkravandi Maanadu

எனினும், 2024 தேர்தலில் நாம் தமிழர் கட்சி இந்த வட மாவட்டங்களிலும் தனது வாக்கு சதவீதத்தைச் சீராக உயர்த்தியுள்ளது பிரதான கட்சிகளுக்கு சவால். தவெக தலைவர் விஜய், விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டியில் தனது முதல் மாநாட்டை நடத்தியது இந்த மண்டல அரசியலில் ஒரு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இளைஞர்கள், பெண்களின் ஆதரவு விஜய்க்கு இருப்பதால், அவர் யாருடைய கோட்டையைத் தகர்க்கப் போகிறார் என்பதை அரசியல் விமர்சகர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.

தேர்தலுக்காகப் பிரச்சாரங்களை முன்னெடுக்கும் கட்சிகள் தென்பெண்ணை பாயும் மாவட்ட மக்களின் கோரிக்கைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தென்பெண்ணையாற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுத்து அதன் தூய்மையைப் பாதுகாப்பது, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி பகுதிகளில் புதிய ஐடி நிறுவனங்கள் மற்றும் சிமெண்ட் ஆலை சார்ந்த வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மக்களின் பிரதான கோரிக்கை. என்.எல்.சி தொழிலாளர்களின் நீண்டகாலப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது,

கடலூர் பகுதியில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளுக்கு நிரந்தர வடிகால் வசதி செய்வது மற்றும் ஜெயங்கொண்டம் - காரைக்கால் ரயில்வே திட்டத்தை நிறைவேற்றுவது போன்றவை இந்த மண்டல மக்களின் மிக முக்கிய எதிர்பார்ப்புகளாக உள்ளன.