விருதுநகர் | தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. 20 பேர் உயிரிழந்த சோகம்.!
விருதுநகர் மாவட்டம் வச்சகாரப்பட்டி அருகே தனியாருக்கு சொந்தமான வனஜா பட்டாசு ஆலை செய்யப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமையான இன்று அந்த ஆலையில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்தசூழலில் தான், இன்று பிற்பகலில் எதிர்பாராத விதமாக வெடிவிபத்து ஏற்பட்டிருக்கிறது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். முதலில், 4 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்திருக்கிறது. 6 பேர் மருத்துவமனையில், சிகிச்சைபெற்று வருகின்றனர். மேலும், பட்டாசு ஆலையில் உள்ள 4 அறைகள் முற்றிலும் சேதமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து, மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
தொடர்ந்து, இந்த வெடிவிபத்து குறித்து எஸ்.பி. ஸ்ரீநாதா சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்துள்ளார். வெடி மருந்துகள் பயங்கர சத்தத்துடன் வெடித்ததாகவும், 10 கி.மீ தூரத்துக்கு அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
