chennai
chennai web

முக்கிய களம் ’சென்னை’| வில்லிவாக்கம் முதல் எழும்பூர் வரை.. திமுகவின் கோட்டை கைமாறுமா..?

தனித்துவமான வாக்காளர் பலத்தையும், அரசியல் கணக்குகளையும் கொண்டுள்ளதால், சென்னையின் அரசியல் களம் எப்போதும் ஒரு சுவாரசியமான போர்க்களமாகவே காட்சியளிக்கிறது. தொகுதி அலசலில் சென்னையின் சில தொகுதிகள் குறித்து பார்க்கலாம் இன்று...
Published on
Summary

சென்னையின் முக்கிய நகரத் தொகுதிகளில் திமுகவும் அதிமுகவும் பல ஆண்டுகளாக ஆட்சி ஆதிக்கத்திற்காக மோதுகின்றன. வில்லிவாக்கம், அண்ணா நகர், ஆயிரம் விளக்கு, எழும்பூர், திரு.வி.க நகர் போன்றவை திமுகவின் பாரம்பரிய கோட்டைகளாகத் திகழ, அரசு ஊழியர்கள், நடுத்தர வர்க்கம், ஆதிதிராவிடர் சமூக வாக்குகள் இவர்களுக்கு முதுகெலும்பாக உள்ளன. ராயபுரத்தில் அதிமுக கோட்டை இடிந்தது முக்கிய திருப்பமாகும்.

ஒரு லட்சத்து ஐம்பத்தொன்பதாயிரம் வாக்காளர்களைக் கொண்ட வில்லிவாக்கம் தொகுதியில், கடந்த ஐந்து தேர்தல்களில் திமுக 4 முறை வென்று தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. அரசு ஊழியர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் திமுகவின் பலமாக இங்கே உள்ளனர்.

chennai
chennai web

இதேபோல், ஒரு லட்சத்து எண்பத்தோராயிரம் வாக்காளர்களைக் கொண்ட அண்ணா நகர் மற்றும் ஒரு லட்சத்து ஐம்பத்து மூன்றாயிரம் வாக்காளர்களைக் கொண்ட ஆயிரம் விளக்கு ஆகிய தொகுதிகளும் திமுகவின் பாரம்பரிய தளங்களாகவே நீடிக்கின்றன. குறிப்பாக, முதல்வர் மு.க. ஸ்டாலின் போட்டியிட்ட ஆயிரம் விளக்குத் தொகுதி, இன்று டாக்டர் எழிலன் நாகநாதன் வசம் ஒரு பலமான கோட்டையாகத் திகழ்கிறது.

2011இல் உருவாக்கப்பட்ட திரு.வி.க நகர் தனித் தொகுதியில், சுமார் ஒரு லட்சத்து எழுபத்தெட்டாயிரம் வாக்காளர்கள் உள்ளனர். ஆதிதிராவிடர் சமூக மக்களின் ஆதரவுடன் திமுக இங்கே தொடர் வெற்றிகளைப் பெற்று வருகிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி இங்கே இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

chennai
chennai web

மறுபுறம், ஒரு லட்சத்து தொண்ணூற்றாயிரம் வாக்காளர்கள் கொண்ட விருகம்பாக்கம், ஒரு கணிக்க முடியாத களமாக உள்ளது. இங்கே திமுக, அதிமுக, தேமுதிக என மூன்று கட்சிகளுமே தலா ஒருமுறை வெற்றியை ருசித்துள்ளன. சினிமா தொழிலாளர்கள் மற்றும் வணிகர்களின் வாக்குகள் இங்கே வெற்றியைத் தீர்மானிக்கின்றன.

சென்னையின் இதயமாகக் கருதப்படும் எழும்பூர் தனித் தொகுதியில் ஒரு லட்சத்து முப்பத்து நான்காயிரம் வாக்காளர்கள் உள்ளனர். கடந்த ஐந்து தேர்தல்களில் 4 முறை திமுக இங்கே வெற்றி வாகை சூடி, தனது கோட்டையாகத் தக்கவைத்துள்ளது. ஆனால், வணிகர்களின் சொர்க்கமான தியாகராய நகர், அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மல்யுத்தம் நடக்கும் களமாகும். ஒரு லட்சத்து ஐம்பத்து நான்காயிரம் வாக்காளர்கள் உள்ள இத்தொகுதியில், கடந்த காலங்களில் அதிமுக மூன்று முறையும், திமுக இரண்டு முறையும் வென்றுள்ளன.

Royapuram
Royapuramweb

நீண்டகாலமாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் இரும்புக்கோட்டையாகத் திகழ்ந்த தொகுதி ராயபுரம். சுமார் ஒரு லட்சத்து ஐம்பத்தாறாயிரம் வாக்காளர்கள் உள்ள இத்தொகுதியில், கடந்த ஐந்து தேர்தல்களில் நான்கு முறை அதிமுகவே வென்றிருந்தது.

இருப்பினும், 2021 தேர்தலில் திமுகவின் ஐட்ரீம் மூர்த்தி அந்த வரலாற்றை மாற்றி எழுதினார். தற்போது சென்னையின் மிக முக்கியமான அரசியல் உற்றுநோக்கலாக இத்தொகுதி மாறியுள்ளது. ஐட்ரீம் மூர்த்திக்கு பதிலாக இந்த முறை இடி மின்னல் மழை என கருணாநிதியால் புகழப்பட்ட மூவர்களில் ஒருவரான ரகுமான் கானின் மகன் சுபைர் கான் இங்கு போட்டியிடுகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com