1980களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் என இருபெரும் ஜாம்பவான்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த சமயத்தில், தனக்கென சினிமாவில் தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கிய விஜயகாந்த், ஜனநாயக தேர்தலிலும் ஒரு முக்கிய புள்ளியாக மாறியது எப்படி.
எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து விலகி அதிமுக என தனி கட்சி தொடங்கி ஆட்சி பிடித்த காலத்தில் இருந்தே, தமிழக திரைப்பட பிரபலங்கள் அரசியலில் ஈடுபடுவது வாடிக்கையாக இருந்துவருகிறது. ஆனால், எம்.ஜி.ஆருக்குப் பிறகு தனது திரையுலக செல்வாக்கால் அரசியலில் சாதித்தவர் என விஜயகாந்தை மட்டுமே சொல்ல முடியும்.
தமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதா என இருபெரும் தலைவர்கள் திராவிட கட்சிகளை வழிநடத்தி வந்த காலத்தில், நீண்ட காலமாக அரசியல் கருத்துகளை பேசி வந்த ரஜினிகாந்த் தயக்கம் காட்டிவந்த நிலையில், துணிச்சலாக அரசியல் கட்சியை 2005ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கினார் விஜயகாந்த்.
2005ஆம் ஆண்டு கட்சி தொடங்கி இருந்தாலும் அதற்கான அச்சாரத்தை 1990களில் இருந்தே போட்டு வந்தார் விஜயகாந்த், தமிழ்நாடு முழுவதிலும் இருந்த தன்னுடைய ரசிகர்களை ஒருங்கிணைத்து நற்பணி மன்றமாக மாற்றி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தார். எம்ஜிஆர்-ன் ரசிகனாக இருந்தாலும் திமுக தலைவர் கருணாநிதியுடன் நெருக்கமாக பழகினார். ஈழத் தமிழர் பிரச்சினை வந்தபோது தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.
தன்னுடைய முதல் மகனுக்கு பிரபாகரன் என பெயர் வைத்த விஜயகாந்த், தன்னுடைய இரண்டாவது மகனுக்கு சவுக்கத் அலி என பெயர் வைத்து சாதி மதங்களை எல்லாம் கடந்தவன் என காட்டினார். தெலுங்கு பின்னணி சேர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் தெலுங்கில் நடிக்க பல வாய்ப்புகள் வந்த போதும், நான் தமிழன், தமிழ் மொழியில் மட்டுமே நடிப்பேன் என அரசியலை பேசி வந்தார் விஜயகாந்த்.
2006ஆம் ஆண்டு தேர்தலில், தே.மு.தி.க. சார்பில் 234 தொகுதிகளில் போட்டியிட்ட, வேட்பாளர்களில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்றாலும் 8.38 % வாக்குகளை தேமுதிக பெற்றது.
அடுத்து 2009 நாடாளுமன்ற தேர்தலிலும் தனித்தே போட்டியிட்டது. எந்த இடங்களிலும் வெல்ல முடியவில்லையென்றாலும், 10.3 சதவீத வாக்குகளை அந்தக் கட்சி பெற்றது. தமிழ்நாட்டில், தி.மு.க. - அ.தி.மு.கவிற்கு மாற்றாக விஜயகாந்த் இருப்பதை அந்தத் தேர்தல் சுட்டிக்காட்டியது.
திமுக அதிமுக என இரண்டு கட்சிகளும் ஆட்சி அமைக்க விஜயகாந்த் வேண்டும் என்ற நிலை உருவானது. பல்வேறு குழப்பங்களுக்கு பின் 2011ஆம் ஆண்டில் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட தே.மு.தி.க. 29 எம்.எல்.ஏக்களைப் பெற்று, எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.
ஆரம்பத்தில் சுமுகமாக சென்றாலும் சட்ட மன்றத்திலேயே முதலமைச்சர் ஜெயலலிதாவும் விஜயகாந்த்தும் கடுமையாக மோதிக்கொண்டனர். அதனை தொடர்ந்து தே.மு.தி.கவின் சட்டமன்ற உறுப்பினர்களை தன் பக்கம் இழுக்க ஆரம்பித்தார் ஜெயலலிதா. விரைவிலேயே 2011ல் தே.மு.தி.கவின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பல எம்.எல்.ஏக்கள் அ.தி.மு.க, தி.மு.க வில் இணைந்தார்கள்.
2014 ஆம் ஆண்டு பாஜக அணியில் இணைந்தது தேமுதிக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார், விஜயகாந்த். ஆனால் தேமுதிக ஒரு தொகுதி கூட வெற்றி பெறவில்லை வாக்கு சதவீதம் 5.5% குறைந்தது, இருந்தாலும் தேமுதிகவை வெற்றிக்கு முக்கியமான கட்சியாக 2016ஆம் ஆண்டு பார்த்தது திமுக.
மற்றொருபுறம் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விசிக ஆகிய நான்கு கட்சிகள் இணைந்து அமைத்த மக்கள் நல கூட்டணி சார்பிலும் அழைப்பு வந்தது, கிங் ஆக இருக்க வேண்டும் என விஜயகாந்த் கூற மக்கள் நல கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக களமிறங்கினார் விஜயகாந்த்.
2016 தேர்தல் முடிவுகளில் விஜயகாந்த் தோல்வி அடைந்தார். வாக்கு சதவீதம் 2.5% குறைந்தது, அதே நேரத்தில் விஜயகாந்த் உடல்நல பாதிப்புக்கும் உள்ளானார். அதன் பின் தோல்வியில் இருந்தே மீள முடியாமல் உள்ளது தேமுதிக.
அரசியலில் தோல்வியை சந்தித்து வந்தாலும் உடல்நல குறைவால் அவர் அவதிப்பட்ட நேரத்தில் விஜயகாந்த் மீது தமிழக மக்கள் அனுதாபங்களை தொடர்ந்து வழங்கி வந்தனர். அவர் உயிரிழந்த நேரத்தில் சென்னை தீபுதிடலில் அவர் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நேரத்தில் அரசியல் கட்சிகளை கடந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தினர். அவர் மறைவுக்கு பின் பத்ம பூஷன் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
எப்போதும் மக்கள் மீதும், மக்கள் நலன்மீதும் கருணை கொண்ட குணத்தால் விஜயகாந்த் போற்றப்படுகிறார்.