வீராணம் ஏரி pt web
தமிழ்நாடு

சோழர்கள் மணிமகுடத்தின் வைரக்கல் வீராணம் ஏரி!

சோழர்களின் நீர் மேலாண்மையை ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் உலகிற்கு பறைச்சாற்றிக் கொண்டிருக்கும் வீராணம் ஏரி, இந்த கோடையிலும் தொடர்ந்து 3ஆவது முறையாக நிரம்பியுள்ளது.

PT WEB

தமிழகத்தை நீர் பாதைகளால் இணைத்த சோழ மன்னர்களின் மகத்தான சாதனை மணி மகுடத்தின் வைரக்கல்தான் வீராணம் ஏரி. இன்றைய 2கே கிட்ஸுக்கும் பிடித்த பொன்னியின் செல்வன் தொடங்குவது இந்த ஏரிக்கரையில் இருந்துதான். சோழர்களின் வரலாற்றில் இன்றியமையாத இடம் பிடித்த வீராணம் ஏரி இயற்கையாக உருவானது அல்ல. எவ்வித நவீன உபகரணங்களும் இல்லாத போதே முழுவதுமாக மனித உழைப்பால் உருவாக்கப்பட்ட பிரம்மாண்டம் இது.

பராந்தக சோழ மன்னனின் மகன் ராஜாதித்ய சோழன் தக்கோலம் போருக்கு செல்லும் வழியில் வடகாவிரியாம் கொள்ளிடத்தின் நீர் வீணாக கடலில் கலப்பதை காண்கிறார். போரில் வெல்வதைக் காட்டிலும் மக்கள் மனங்களை வெல்வதே முதன்மையானது என்பதை உணர்ந்த ராஜாதித்யன், தற்போதைய கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயிலில் ஏரி வெட்டி கொள்ளிடம் நீரை தேக்க முடிவெடுத்தார்.

அப்படி ஆயிரக்கணக்கான போர் வீரர்களால் போர் ஆயுதங்களை பயன்படுத்தி 907 ஆண்டு முதல் 953 ஆம் ஆண்டு வரை மிகப்பெரிய ஏரி வெட்டப்பட்டது. உலகில் முற்றிலும் மனிதர்களாலேயே வெட்டப்பட்ட ஏரிகளில் வீராணத்திற்கும் தனி இடம் உண்டு. அந்த சிறப்பு மிக்க ஏரிக்கு, தன் தந்தை பராந்தக சோழன் மீது கொண்ட அளவற்ற அன்பை பறைசாற்றும் வகையில், அவரது இயற்பெயரிலேயே வீரநாராயணன் ஏரி என பெயர் சூட்ட விரும்பினார். போரில் அவர் வீரமரணம் அடைந்தாலும், அவரது கடைசி ஆசையின்படியே வீரநாராயணன் ஏரி உருவானது. அது காலப்போக்கில் மருகி வீராணம் ஏரி என்றானது.

பாசனத்திற்காக மட்டுமல்ல சென்னையின் பெருவாரியான குடிநீர் தாகத்தையும் வீராணமே தணிக்கிறது. அதற்காக விநாடிக்கு 72 கன அடி நீர் குழாய்கள் மூலம் அனுப்பப்படும். பாசனத்திற்காக வடவாறு வழியே விநாடிக்கு ஆயிரத்து 592 கன அடி நீரும், வடக்கு ராஜன் வாய்க்காலில் 220 கன அடி நீரும், சேத்தியாதோப்பில் உள்ள வி.என். எஸ்.எஸ். மதகு வழியாக ஆயிரத்து 143 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது. கொள்ளிடம் வழியே 8ஆயிரத்து 600 கன அடி நீர் கடலில் கலக்கிறது.

வீராணம் ஏரி

தந்தையின் மீதிருந்த அளப்பறிய பாசத்தை சிரத்தையுடன் வெளிப்படுத்திய ராஜாதித்ய சோழன் போலவே, அவரால் வெட்டப்பட்ட வீராணம் ஏரியும், அதனை நம்பியுள்ள மக்களின் நம்பிக்கையை பொய்யாக்கவில்லை. நடப்பு கோடைக்காலத்தில் மே, ஜூன் மாதங்களை தொடர்ந்து 3ஆவது முறையாக ஜூலை மாதமும் முழு கொள்ளவை எட்டி மண்ணையும், அந்த மண்ணின் மைந்தர்களையும் குவிர்க்கச் செய்துள்ளது வீராணம் ஏரி.