யினர்தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் உள்ள முரண்பாடுகளை களைய வலியுறுத்தியும், சம வேலைக்கு சம ஊதியம் தொடர்பான திமுகவின் 311ஆவது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும் இடைநிலை ’பதிவு மூப்புஆசிரியர்’ இயக்கத்தினர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 1500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இன்று இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
முன்னதாக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ 2009ம் ஆண்டுக்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஒரே பதவி, ஒரே கல்வித்தகுதி, ஒரே பணி இருந்த போதும், அடிப்படை ஊதியத்தில் 3,170 ரூபாய் குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எங்களுக்குமுன் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு 8,370 ரூபாயும், எங்களுக்கு 5,200 ரூபாயும் அடிப்படை ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த முரண்பாடு, தற்போது மாதத்திற்கு 27,000 ரூபாயாக உள்ளது. இதை களைய வலியுறுத்தி, கடந்த ஆட்சிக் காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட போது, தி.மு.க தலைவர் ஸ்டாலின் எங்களை சந்தித்து, 'தி.மு.க., ஆட்சி அமைக்கும் பட்சத்தில், 20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும்' என்று தெரிவித்தார்.
ஆனால், திமுக ஆட்சி அமைத்து நான்கு ஆண்டுகளாகியும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. கடந்த 16 ஆண்டுகளாக, இந்த ஊதிய முரண்பாட்டை எதிர்த்து போராடி வருகிறோம். ஒவ்வொரு போராட்டத்தின் போதும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், 'முதல் பிரச்னையாக இது தீர்க்கப்படும்' என்று கூறுகிறார்; எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே, திமுக தேர்தல் அறிக்கைப்படி, சம வேலைக்கு சம ஊதியம் என்பதை, அறிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்ததை கண்டித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ”சம வேலைக்கு சம ஊதியம் கோரி, சென்னையில் இன்று போராடிய இடைநிலை ஆசிரியர்கள் மீது, திமுக அரசு அடக்குமுறையை ஏவி கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பொய்யான தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்து பொதுமக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, ஐந்து ஆண்டுகள் ஆகியும் எந்த வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது.
திமுக தனது தேர்தல் வாக்குறுதி எண் 311 -ல், சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவோம் என கூறியிருந்ததை நிறைவேற்றக் கோரி தமிழக பாஜக சார்பில் பலமுறை வலியுறுத்தி வருகிறோம். மேலும், இடைநிலை ஆசிரியர்கள், கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்தும், கவன ஈர்ப்புப் போராட்டங்கள் நடத்தி வலியுறுத்தியும், திமுக அரசு அவர்களைக் கண்டுகொள்ளாமல் வஞ்சித்து வருகிறது. தங்கள் உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் மீது, கைது நடவடிக்கை மேற்கொண்டு, அவர்களை ஒடுக்குவதையே முழு நேரப் பணியாக செய்து வருகிறது திமுக அரசு. கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளையே ஐந்து ஆண்டுகளாக நிறைவேற்றாமல், மீண்டும் ஒரு தேர்தல் அறிக்கை குழுவை அமைக்க முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்குக் கூச்சமாக இல்லையா?” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.