முதல்வர் மு.க ஸ்டாலின் x
தமிழ்நாடு

கடைசி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்... அனைத்திற்கும் தயாராகும் திமுக..

தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், களப் பணிகளில் முந்தியிருக்கிறது திமுக. இந்தப் பின்னணியில் திருவண்ணாலையில் நடைபெறும் திமுக மண்டல மாநாட்டின் முக்கியத்துவம் என்ன என்பதைப் பார்க்கலாம்.

PT WEB

பிகாரைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் மேற்கு வங்கத்திலும் மெகா கூட்டணி அமைக்கப்படும், ஆட்சிகள் அகற்றப்படும் என்று அமித் ஷா கூறிவரும் நிலையில், எந்தவகையான புதிய சாத்தியங்களையும் முறியடிக்கத் தயாராகிவருகிறார் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின். எதிரே, பாஜக - அதிமுக அணி, தவெக, நாம் தமிழர் என்று இதுவரை மூன்று பிரதான எதிர்சக்திகள் பிளவுபட்டு நிற்கிறது.

திமுக இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு, திருவண்ணாமலை

தொடர்ந்து, திரைமறைவில் அதிமுக - தவெக கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் நடந்துவருவதையும், கடைசி நேரத்தில்கூட எதுவும் நடக்கலாம் என்பதையும் திமுக நன்கு உணர்ந்திருக்கிறது. எனவே, இதில் யார் யாரோடு கைகோத்தாலும், எதிர்கொள்ளத் தயாராகவே இருக்க வேண்டும் என்று கட்சியினருக்குக் கூறியிருக்கிறார் ஸ்டாலின். அதற்கேற்ப தேர்தல் பணிகளைத் துல்லியமாகத் திட்டமிட்டு காய்களை நகர்த்துகிறார்.

தமிழ்நாட்டை அமைப்பு ரீதியாக 78 மாவட்டங்களாகவும், நான்கு மண்டலங்களாகவும் பிரித்திருக்கும் திமுக. கட்சியினரை அணி வாரியாகவும் பிரித்திருக்கிறது. தமிழ்நாட்டு வாக்காளர்களில் 20 சதவீதம் பேர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் எனும் சூழலில், இளைஞர்களை ஈர்க்க வேண்டிய அவசியத்தை அது உணர்ந்திருக்கிறது. சீமான், விஜய், அண்ணாமலை இவர்களுக்கெல்லாம் முகம் கொடுக்கும் வகையில், உதயநிதி தலைமையிலான இளைஞரணிக்கு புத்தாக்கம் கொடுத்திருக்கிறது. அந்த வகையில், 91 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 1 லட்சத்து 30 ஆயிரம் இளைஞரணி நிர்வாகிகளை திருவண்ணாமலைக்கு அழைத்திருக்கிறது திமுக.

திமுக இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு

தேர்தலை எதிர்கொள்ளும் வியூகத்தை கட்சித் தலைமையிடமிருந்து நிர்வாகிகளுக்குக் கடத்துவதோடு, முக்கிய அறிவிப்புகளையும் இந்த மாநாடுகளின் வழியே திமுக வெளியிடவிருக்கிறது. கட்சியிலும் வரவிருக்கும் தேர்தலிலும் இளைஞர்களின் கை ஓங்குவதை மறைமுகமாக சொல்லும் குறியீடாகவும் இந்நிகழ்வு பார்க்கப்படுகிறது. அந்த வகையில் திமுகவின் கோட்டையான திருவண்ணாமலையைத்தாண்டியும், அனைவராலும் உற்றுநோக்கப்படுகிறது இந்த மண்டல மாநாடு!