சான்றிதழ் எடுத்து வராத எம்.எல்.ஏ-க்கள் Pt web
தமிழ்நாடு

TN Assembly | சான்றிதழ் கொண்டு வராத தவெக, அதிமுக எம்.எல்.ஏ-க்கள்.. பதவியேற்பு இல்லை!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்று வரும் நிலையில், தவெக அமைச்சர் உட்பட ஒரு சில சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெற்றிச் சான்றிதழை கொண்டு வராத நிலையில், பதவியேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Premkumar S

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக தேர்தலை சந்தித்தித்த தவெக தனிப் பெரும்கட்சியாக 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் ஐயூஎம்எல் போன்ற கட்சிகளின் ஆதரவுடன் தவெக தலைவர் விஜய் நேற்று முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இதற்கான, பதவியேற்பு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. விஜயுடன் சேர்த்து ஆதவ் அர்ஜுனா, என். ஆனந்த், செங்கோட்டையன் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

விஜய்

தொடர்ந்து, நேற்று மாலை சோழவந்தான் தொகுதி (தனி) தவெக சட்டப்பேரவை உறுப்பினர் கருப்பையா தற்காலிக சபாநாயகராக பதவியேற்றுக் கொண்டார். இந்தசூழலில் தான், 17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று காலை 9.30 மணியளவில் தொடங்கியிருக்கிறது. இந்தக்கூட்டத்தில் முதல்வர் விஜய், அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைத் தொடர்ந்து சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்கள் சபாநாயகர் கருப்பையா முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து வருகின்றனர்.

இந்தசூழலில் தான், தவெகவில் இருந்து அமைச்சராக பதவியேற்றுள்ள கீர்த்தனா எம்.எல்.ஏ-வாக பதவியேற்கும் முன்பு பேரவை செயலாளரிடம் தான் எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்ற சான்றிதழை எடுத்து வரவில்லை எனக் கூறினார். இதனையடுத்து, அவர் பதவியேற்க முடியவில்லை. அவர் மட்டுமின்றி, தவெகவில் சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. சிவக்குமார், சோழிங்கர் தொகுதி எம்.எல்.ஏ ஈ.சி.ஆர். சரவணன், பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ. காமாட்சி ஆகியோரும் எம்.எல்.ஏ. சான்றிதழை கொண்டு வராததால் பதவியேற்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.

அதேபோல, அதிமுக ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ. உஷா ராணி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பண்ணனும் வெற்றி சான்றிதழ் கொண்டுவரவில்லை. ஒருவர் தேர்தலில் சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்று 15 நாட்களுக்குள் பதவியேற்றுக் கொள்ள வேண்டும் என்பதால், நாளைய சட்டப்பேரவையின் போது கூட சட்டப்பேரவை உறுப்பினர்களாக விடுபட்டவர்கள் பதவியேற்றுக் கொள்ள முடியும்.