MGR முதல் விஜய் வரை... செங்கோட்டையன் கடந்து வந்த பாதை : தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத சாணக்கியர்!
தமிழக வெற்றிக்கழகம் முதல்முறையாக ஆட்சியமைத்துள்ள நிலையில், அக்கட்சித் தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆருக்கு பின்னர் கட்சி தொடங்கி முதலமைச்சராகியுள்ள விஜய் இந்திய அளவில் பேசுபொருளாகியுள்ளார். அதே நேரம் குறுகிய காலத்தில் விஜய் அடைந்துள்ள இந்த உயரத்துக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் என்றால் அது செங்கோட்டையன் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. 1970 களில் திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் நீக்கப்பட்ட நிலையில், அவர் அதிமுக என்ற கட்சியை தொடங்கினார்.
சிறு வயதில் இருந்தே எம்.ஜி.ஆரின் ரசிகராக இருந்த செங்கோட்டையன் தனது 25 வயதில், அதாவது 1972-ம் ஆண்டில் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அதிமுக அடிமட்ட உறுப்பினராக தனது பயணத்தை தொடங்கிய அவருக்கு முதலில் எம்.ஜி.ஆர் மன்ற மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து கோவையில் அதிமுக பொதுக்குழு நடைபெற்ற நிலையில், அந்த பொதுக்குழுவை நடத்தும் பொறுப்பாளர்களின் ஒருவராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டார். அந்த நிகழ்ச்சியில் வெற்றிகரமாக நடத்திக் காட்டிய செங்கோட்டையன் எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குரியவராக மாறினார்.
எம்.ஜி.ஆரின் நம்பிக்கையை பெற்றதால் 1977-ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட செங்கோட்டையனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தான் களம்கண்ட முதல் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை 1,506 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சட்டமன்றத்தில் நுழைந்த செங்கோட்டையன் அப்போதில் இருந்து அதிமுகவின் முக்கியமான தலைவராக உருவானார்.
அதன் பின்னர் 1980-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் 15,013 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றிபெற்ற நிலையில், அப்போதில் இருந்து தற்போது வரை அந்த கோபிச்செட்டிபாளையம் தொகுதியை தனது கோட்டையாக மாற்றி வைத்துள்ளார்.
தமிழக தேர்தல் வரலாற்றில் ஒரே தொகுதியில் 10 முறை போட்டியிட்டு அதில் 9 முறை வெற்றி பெற்ற சாதனையாளராக திகழ்கிறார் செங்கோட்டையன். எம்.ஜி.ஆர். மறைந்த பின்னர் அதிமுக கட்சியே இரண்டாக உடைந்தது. அப்போது ஜெயலலிதாவின் பக்கம் உறுதியாக நின்ற செங்கோட்டையன் 1989 தேர்தலில் சேவல் சின்னத்தில் நின்று அபார வெற்றிபெற்றார்.
தொடர்ந்து அதிமுகவை ஒருங்கிணைப்பதில் முனைப்பு காட்டிய செங்கோட்டையன், அப்பணியை வெற்றிகரமாக நிறைவேற்றி, ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக மாறினார். அதன் காரணமாக 1991-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்ததும் செங்கோட்டையனுக்கு முதல் முறையாக அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.
1991-ம் ஆண்டு போக்குவரத்துத் துறை அமைச்சர், 2011 முதல் 2012 வரை விவசாயத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், 2017 முதல் 2021 பள்ளிக் கல்வித் துறை அமைச்சராகவும் செங்கோட்டையன் பணியாற்றியுள்ளார். இதுவரை 10 முறை சட்டமன்றத் தேர்தலில் வென்று சட்டமன்ற உறுப்பினராகவும் அவர் திகழ்ந்து வந்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கட்சியை கட்டுக்கோப்பாக வழிநடத்தியதில் செங்கோட்டையனுக்கு பெரும் பங்கு உண்டு. ஆனால் 2021-ம் ஆண்டுக்கு பின்னர் அதிமுக ஆட்சியை இழந்த நிலையில், கட்சி மேலிடம் மீது செங்கோட்டையனுக்கு பெரும் அதிருப்தி எழுந்தது.
இந்த சூழலில் அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில், நடிகர் விஜய் புதிதாக தொடங்கியிருந்த தமிழக வெற்றிக்கழகத்தில் அவர் தன்னை இணைத்துக்கொண்டார். தவெகவில் மூத்த அரசியல் தலைவர்கள் யாரும் இல்லாத நிலையில், அக்கட்சியின் ஆசானாக இருந்து வழிநடத்திய அவர், அக்கட்சி களமிறங்கிய முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே அக்கட்சியை ஆட்சிக்கட்டிலில் அமரவைத்து சாதனை படைத்துள்ளார்.

