முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி.. தொடங்கியது சட்டப்பேரவை.. பதவியேற்கும் எம்எல்ஏ-க்கள்!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக தேர்தலை சந்தித்தித்த தவெக தனிப் பெரும்கட்சியாக 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் ஐயூஎம்எல் போன்ற கட்சிகளின் ஆதரவுடன் தவெக தலைவர் விஜய் நேற்று முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இதற்கான, பதவியேற்பு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. விஜயுடன் சேர்த்து ஆதவ் அர்ஜுனா, என். ஆனந்த், செங்கோட்டையன் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தொடர்ந்து, நேற்று மாலை சோழவந்தான் தொகுதி (தனி) தவெக சட்டப்பேரவை உறுப்பினர் கருப்பையா தற்காலிக சபாநாயகராக பதவியேற்றுக் கொண்டார். இந்தசூழலில் தான், 17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று காலை 9.30 மணியளவில் தொடங்கியிருக்கிறது. இந்தக்கூட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைத் தொடர்ந்து சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்கள் சபாநாயகர் கருப்பையா முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து வருகின்றனர்.
ஒரே வரிசையில் திமுக, அதிமுக,
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக தேர்தலை சந்தித்த தவெக ஆட்சியமைத்திருக்கும் நிலையில், திமுக 59 தொகுதிகளுடன் எதிர்க்கட்சியாக உள்ளது. அதேபோல, 47 இடங்களில் மட்டுமே வென்ற அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. இந்தசூழலில் தான், வரலாற்றில் முதன்முறையாக எதிர்க்கட்சி வரிசையில் அதாவது, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகள் ஒரே வரிசையில் அமர்ந்துள்ளன.
முதல்வர் விஜய் - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி
நடந்து முடிந்த தேர்தலில் கொளத்தூரில் போட்டியிட்ட முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தோல்வியைத் தழுவியிருந்த நிலையில், திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் பலரும் தோல்வியைச் சந்தித்து இருந்னர். இந்த சூழலில்தான், திமுக சட்டமன்றக்குழுத் தலைவராக உதயநிதி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று முதல்வராக விஜயும் எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதியும் எதிரெதிர் வரிசையில் அமர்ந்திருக்கின்றனர்.

