தஷ்வந்த், உச்ச நீதிமன்றம் எக்ஸ் தளம்
தமிழ்நாடு

சிறுமி வன்கொடுமை வழக்கு.. "தஷ்வந்தின் தூக்குத் தண்டனை ரத்து" - உச்ச நீதிமன்றம்

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி தஷ்வந்த்க்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

PT WEB

சென்னையில் கடந்த 2017ஆம் ஆண்டு, 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து உடலை எரித்து கொலை செய்த கொலையாளி தஷ்வந்த் பெயரை அவ்வளவு எளிதில் தமிழ்நாடு மறந்திருக்காது. தற்போது உச்ச நீதிமன்றம் தஷ்வந்தின் தூக்குத் தண்டையை ரத்து செய்துள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். இது தமிழகம் மட்டுமின்றி நாட்டையே உலுக்கிய சூழலில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுமி வசித்த அதே குடியிருப்பைச் சேர்ந்த 22 வயதான தஷ்வந்த் எனும் இளைஞர் மீது காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன்பேரில் தஷ்வந்திடம் விசாரணை நடத்திய போலீசார், இறுதியில் அவரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

தஷ்வந்த்

எனினும், 90 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாத காரணத்தினால் தஷ்வந்த் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில், 2017 டிசம்பர் 2ஆம் தேதி தஷ்வந்த் அவரது தாயார் சரளாவை அடித்து கொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த 25 பவுன் தங்க நகைகளை பறித்து மும்பைக்குத் தப்பிச் சென்றார். தமிழக போலீசார் மும்பை சென்று கைது செய்யபோதும் போலீசாரிடம் இருந்தும் தஷ்வந்த் தப்பினான். பின்னர் மும்பை போலீசார் உதவியுடன் தமிழகம் அழைத்து வரப்பட்டு தஷ்வந்தைப் புழல் சிறையில் அடைத்தனர்.

கடந்த 2018 பிப்ரவரி மாதம் வழக்கின் விசாரணை செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நிறைவடைந்தது. 2018 பிப்ரவரி 19ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் தஷ்வந்துக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தஷ்வந்த் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்த நிலையில், சந்தேகத்துக்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற மனுவை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்தனர்.

இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை கருணை அடிப்படையில் ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் தஷ்வந்த் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் ஏற்றபோது, தஷ்வந்துக்கு அளிக்கப்பட்ட தண்டனை ஆயுள் தண்டனையாக இருந்திருந்தால், நிச்சயம் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றிருக்க மாட்டோம். தூக்குத் தண்டனை என்பதால் விசாரணைக்கு ஏற்கிறோம் என தெரிவித்ததோடு, தூக்குத் தண்டனையையும் நிறுத்தி வைத்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

உச்ச நீதிமன்றம்

அதில் தஷ்வந்த் தொடர்பான வழக்கில் முறையாக ஆதாரம் ஏதும் சமர்ப்பிக்கப்படவில்லை. அதேபோன்று, சமர்ப்பிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளில் தஷ்வந்த்தான் இருந்தார் என்பதை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், டிஎன்ஏ (DNA) ஆய்வும் சரியானதாக ஒத்துப் போகவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். எனவே, சந்தேகத்தின் பலனை குற்றம்சாட்டப்பட்டவருக்கு அளித்து மரண தண்டனையை வழங்கிய கீழமை நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்கிறோம் என தீர்ப்பளித்ததோடு தஷ்வந்தை உடனடியாக விடுவிக்கவும் உத்தரவு பிறப்பித்தனர்.