போரூர் சிறுமி கொலையாளி தஷ்வந்த் தூக்கு தண்டனைக்கு இடைக்காலத் தடை

போரூர் சிறுமி கொலையாளி தஷ்வந்த் தூக்கு தண்டனைக்கு இடைக்காலத் தடை
போரூர் சிறுமி கொலையாளி தஷ்வந்த் தூக்கு தண்டனைக்கு இடைக்காலத் தடை

சென்னையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற வழக்கில் தஷ்வந்திற்கு விதிக்கப்பட்டிருந்த‌ தூக்கு தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சென்னை போரூர் அருகே கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உடல் கருகிய நிலையில் சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இதுதொடர்பான விசாரணையில் தஷ்வந்த் என்ற இளைஞர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்றது தெரியவந்தது. விசாரணையின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், தஷ்வந்துக்கு தூக்குத் தண்டனை விதித்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், வழக்கின் விசாரணையில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதால் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென தஷ்வந்த் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனு மீதான விசாரணையை அடுத்து, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்த உயர்நீதிமன்றம் தஷ்வந்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் கருணை அடிப்படையில் தூக்குத் தண்டனையை ரத்து செய்து தண்டனையை குறைக்க வேண்டும் என தஷ்வந்த் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம், ஆயுள் தண்டனையாக இருந்தால் விசாரணையே செய்யாமல் மனுவைத் தள்ளுபடி செய்திருப்போம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், இந்த வழக்கின் விசாரணை முடியும் வரை தஷ்வந்திற்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுவதாக கூறிய நீதிபதிகள், இது தொடர்பாக 4 வாரத்திற்குள் தமிழக காவல்துறை விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com