தொகுதி மறுவரையறை மசோதா - ஸ்டாலின் web
தமிழ்நாடு

தொகுதி மறுவரையறை | மசோதா நகலை எரித்து ஸ்டாலின் போராட்டம்.. ’தீ பரவட்டும்’ என பதிவு!

தொகுதி மறுவரையறை என்ற மசோதாவை இன்று மத்திய அரசு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தவதாக சொல்லப்படும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மசோதா நகலை எரித்து போராட்டத்தை தொடங்கினார் திமுக தலைவர் முக ஸ்டாலின்.

Rishan Vengai

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை, லோக்சபா உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்தும் மசோதா, பெண்களுக்கு 33% ஒதுக்கீடு உள்ளிட்ட திட்டங்கள் வருவதாக கூறப்படுகிறது. வடமாநிலங்களுக்கு அதிக இடங்கள் செல்லும் அபாயம், 1967ல் 41இல் இருந்து 39ஆக குறைந்த தமிழ்நாட்டின் அனுபவம் ஆகிய காரணங்களால் தென் மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை உறுதிசெய்யும் திட்டமாக, லோக்சபா உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850ஆக அதிகரிக்கும் அரசியலமைப்பு திருத்த மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா போன்ற மசோதாக்களை இன்று நடைபெறும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

இம்மசோதாக்களின் படி மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டு, பெண்களுக்கு 280 இடங்களாக ஒதுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

தொகுதி மறுவரையறை மசோதா

இந்தசூழலில் தான் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் மக்கள் தொகை கட்டுப்பாடு உள்ளது என்றும், வடமாநிலங்களில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது என்றும், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டால் தென்னிந்திய மாநிலங்களை விட வட மாநிலங்களுக்கே அதிக தொகுதிகள் சேரும் வாய்ப்பு உள்ளதாக எதிர்ப்பு எழுந்துள்ளது.

ஏற்கனவே 1967-இல் நடத்தப்பட்ட மறுவரையறையில் 2 தொகுதிகளை இழந்த தமிழ்நாடு 41 தொகுதிகளிலிருந்து 39ஆக மாறியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

மசோதா நகலை எறித்து ஸ்டாலின் போராட்டம்!

தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், நேற்று அவசர அவசரமாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். கூட்டத்தின் முடிவில் தொகுதி மறுவரையறை என்பது தென்னிந்திய மாநிலங்களுக்கு எதிரான அநீதி என்றும், பாஜக நெருப்போடு விளையாடுகிறது என்றும் கூறிய ஸ்டாலின், இன்று கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.

அந்தவகையில் இன்று கருப்புக்கொடியை ஏற்றி எதிர்ப்பை வெளிப்படுத்திய திமுக தலைவர் ஸ்டாலின், தொகுதி மறுவரையறை மசோதாவின் நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் அவருடைய எக்ஸ் பதிவில், “#Delimitation: தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் #தீ_பரவட்டும்!

பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்!

🔥 அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது!

🔥 இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன்.

🔥இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும்.

🔥 "தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத்

தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!" என பதிவிட்டுள்ளார்.