Tamil Nadu lost two parliamentary seats
Tamil Nadu lost two parliamentary seats constituency delimitation

தொகுதி மறுவரையறையின் ஆபத்து |1967-இல் 2 தொகுதிகளை இழந்த தமிழ்நாடு.. 41 தொகுதி 39 ஆனது எப்படி?

1967-இல் தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு 2 நாடாளுமன்ற இடங்களை இழந்தது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
Published on

மத்திய பாஜக அரசு தொகுதி மறுவரையறை செய்யப்போவதாக அறிவித்துள்ள நிலையில், அது தென்மாநிலங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த தசாப்தங்களில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய மக்கள்தொகை கட்டுப்பாடு திட்டங்களை தென்மாநிலங்கள் சிறப்பாகச் செயல்படுத்தியதால் அந்த மாநிலங்களில் மக்கள்தொகை வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டது.

இவ்வாறு மக்கள்தொகை வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டதால், தென்மாநிலங்கள் சிறப்பான வளர்ச்சியை பதிவுசெய்தன. ஆனால், வடமாநிலங்கள் மக்கள்தொகை வளர்ச்சி கட்டுப்படுத்தத் தவறியதால் அங்கு மக்கள்தொகை கட்டுக்கடங்காமல் அதிகரித்தது. இது, அந்த மாநிலங்களின் வளர்ச்சியையும் கடுமையாகப் பாதித்தது.

இந்த நிலையில், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை கொண்டுவரப்பட்டால் மக்கள்தொகை குறைவாக உள்ள தென் மாநிலங்களில் தொகுதிகள் எண்ணிக்கை குறையவும், வட மாநிலங்களில் அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்தது.

மத்திய அமைச்சர்கள் தொகுதிகளின் எண்ணிக்கையை மறுசீரமைக்கும்போது எந்த மாநிலத்தின் தற்போதைய இடங்களும் குறைக்கப்பட மாட்டாது என்று கூறினாலும், தென்மாநிலங்களைவிட வட மாநிலங்களில் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரித்தால், அதனாலும் தென்மாநிலங்கள் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஆனால், தமிழ்நாட்டில் இதற்கு முன்னரே தொகுதி மறுவரையறை மூலம் தொகுதிகள் குறைக்கப்பட்டுள்ளது பலரும் அறியாத தகவலாகவே உள்ளது. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர், தமிழ்நாட்டுக்கு, அதாவது அப்போதைய மதராஸ் மாகாணத்துக்கு 1957 நாடாளுமன்றத் தேர்தலில் 41 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. பின்னர் 1961-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகு, 1963-இல் அமைக்கப்பட்ட தொகுதிகள் மறுவரையறை ஆணையம், மாநிலங்களுக்கான இடங்களை மக்கள்தொகை விகிதாசாரப்படி மாற்றி அமைத்தது. அதன்படி 1967 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டு, தமிழ்நாட்டின் நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கை 41இல் இருந்து 39 ஆக குறைக்கப்பட்டது.

அதேநேரம் நாடாளுமன்றத்தின் மொத்த எண்ணிக்கை 494-ல் இருந்து 520 அதிகரிக்கப்பட்டது. பல வட மாநிலங்களில் நாடாளுமன்ற இடங்கள் அதிகரிக்கப்பட்டாலும், தமிழ்நாடு மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மக்கள்தொகை குறைந்ததைக் காரணமாக காட்டி தொகுதிகள் குறைக்கப்பட்டன.

அதேபோல 1977 நாடாளுமன்றத் தேர்தலில் நாடாளுமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 520-இல் இருந்து 542 ஆக அதிகரிக்கப்பட்டபோது, வட மாநிலங்களில் மட்டுமே தொகுதிகள் அதிகரிக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. இந்த தேர்தலுக்குப் பின்னர்தான் நிர்ணயிக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கையை 2001-ஆம் ஆண்டு வரை மாற்றக்கூடாது என 42-ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. பின்னர் 2001-ஆம் ஆண்டு இது 2026 வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது 2026-இல் இந்த காலவரையறை முடிவுக்கு வரும் நிலையில், மீண்டும் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, தென்மாநிலங்கள் மீண்டும் வஞ்சிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டு வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாட்டின் இடங்கள் குறைக்கப்பட்டது குறித்து முக்கிய கருத்தைத் தெரிவித்தது. மக்கள்தொகையை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய காரணத்தால், 1967 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தமிழ்நாட்டின் நாடாளுமன்ற இடங்கள் 41-இல் இருந்து 39 ஆகக் குறைக்கப்பட்டது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி என்று நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்தது.

மேலும், இதனால் தமிழ்நாட்டுக்கு சுமார் 5,600 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அல்லது மாநிலங்களவை இடங்களை அதிகரித்து ஈடுசெய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் அரசுக்குப் பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது.

Tamil Nadu lost two parliamentary seats
தொகுதி மறுவரையறை மசோதா என்றால் என்ன..? ஸ்டாலின் எதிர்ப்பது ஏன்..? நாளை கருப்பு கொடி போராட்டம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com