மு.க. ஸ்டாலின் கோப்பு படம்
தமிழ்நாடு

திருச்சி | ”அதிமுகவை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குறாங்க..” - திமுக மாநாட்டில் ஸ்டாலின் பேச்சு!

அதிமுகவை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குறாங்க.. அரசியலில் நேர் எதிரியாக இருந்தாலும் அதிமுக தொண்டர்கள் மீது நாங்கள் உண்மையாகவே பாரிதாப் படுகிறோம் என திருச்சியில் நடைபெற்ற திமுகவின் 12ஆவது மாநில மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியிருக்கிறார்.

Premkumar S

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், திமுகவின் 12ஆவது மாநில மாநாடு திருச்சி சிறுகனூரில் இன்று மிகப்பிரமாண்டமாக நடைபெற்றிருக்கிறது. சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 10 லட்சம் திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, மாலை 6.30 மணியளவில் மாநாட்டு திடலுக்கு வந்த முதல்வர் ஸ்டாலின் 110 அடி உயர திமுக கொடியை ஏற்றிவைத்தார். தொடர்ந்து, பிரத்யேக நடைமேடை (ரேம்ப் வாக்) மூலம் மாநாட்டு மேடையை வந்தடைந்தார். அப்போது, இருபக்கமும் திரண்டிருந்த ஏரளமான தொண்டர்கள் உற்சாகமாக அவரை வரவேற்றனர். மேடைக்கு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு வாள் மற்றும் செங்கோல் வழங்கப்பட்டது. இந்த மாநாட்டிற்கு துணை முதல்வர் ஸ்டாலின் முன்னிலை வகித்தார்.

ஸ்டாலின்

தொடர்ந்து, முதல்வர் மு.க. ஸ்டாலின், நீங்கள் கொடுத்த வரவேற்பு, உற்சாகம் என்னுடைய வயதை குறைத்து இருக்கிறது எனக் கூறி தனது உரையைத் தொடங்கினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், ”திருச்சியில் திரும்பும் திசையெல்லாம் கருப்பு சிவப்பு. தெற்கே குமரியில் இருந்து வடக்கே கும்மிடிப்பூண்டி வரை உள்ள ஒரு பெரும் சேனை தற்போது திருச்சியில் திரண்டிருக்கிறது. சில மாதங்களாக லட்சக்கணக்கான தொண்டர்களோடு மண்டலவாரியாக பூத் கமிட்டி மாநாடுகளை நடத்தினோம். ஆனால், அதற்கெல்லாம் மேலாக இன்று 10 லட்சம் பேர் கலந்துகொண்டிருக்கும் ஒரு பெரிய மாநாடாக இன்று நடக்கிறது.

இந்த மாநாடு எதற்கென சிலர் கேட்கிறார்கள். ஒரு கிரிக்கெட் மேட்சுல முதல் பந்துல இருந்து ரன் அடிப்பது முக்கியம்தான்.. அதேபோல கடைசி ஓவர்களில் அடிச்சு ஆடி கடைசி பந்தில் வெற்றிக்கு சிக்சர் அடிப்பது கிராண்ட் ஃபினிஷிங் ஆக இருக்கும்; அதுபோன்ற வெற்றிக்கு தான் இம்மாநாடு. 200 ஏக்கரில் மாநாடு; அதாவது 200 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பது இலக்கு. திருச்சியை நாம் ஏன் மாநாட்டுக்கு தேர்ந்தெடுத்தோம் என்றால் திருச்சி என்றாலே திருப்பம், திருச்சி என்றாலே எழுச்சி, திருச்சி என்றாலே மகத்தான வெற்றி. நாம் இதுவரை 12 மாநில மாநாடுகளை நடத்தியிருக்கிறோம். அதில், 7 மாநாடுகள் திருச்சியிலே தான் நடந்திருக்கின்றன.

திமுக மாநில மாநாடு

10 ஆண்டுகளுக்குப் பிறகு 2021-ல் 6வது முறையாக திமுக ஆட்சிக்கு வந்தது. இனி எப்போதும் நம் கழகம் தான் ஆட்சிக்கு வரவேண்டும். நம்முடைய எதிரிகளே மறுக்க முடியாத அளவிற்கு நாம் திட்டங்களை இயற்றியிருக்கிறோம். தமிழகத்தை காக்க கருப்பு சிவப்பு முக்கியம். தமிழ்நாடு நம்மை நம்பி இருக்கிறது.. நாமும் தமிழகத்தை நம்பி தான் இருக்கிறோம். திமுக ஆட்சி முடிவில்லாமல் தொடரும். நம்முடைய அரசின் திட்டங்களில் பலனடைந்தவர்கள் நமக்கு வாக்களித்தாலே போதும். நம்மால் எளிமையாக வெல்லமுடியும்.

நம்முடைய தேர்தல் அறிக்கை, கனிமொழி தலைமையில் தயாராகிக்கொண்டிருக்கிறது. அது விரைவில் வெளியிடப்படும். இப்போது, சில அரசியல் கட்சித் தலைவர் சமீப காலமாக தவணை முறையில் சில கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அளிக்கின்றன; அதுவும் திராவிட மாடல் அரசின் திட்டத்தை காபி எடுத்து அறிவிக்கின்றனர். திமுக அரசின் திட்டங்களை அவர்கள் நினைத்தாலும் நிறுத்த முடியாது; தடுக்க முடியாது. திமுக அரசின் திட்டங்கள் இருக்கும் வரை நான்தான் தமிழகத்தை ஆள்கிறேன். நாம் இவ்வளவு செய்துவிட்டுதான் மக்களிடம் வாக்கு கேட்கிறோம்.

என்.டி.ஏ பொதுக்கூட்டம்

ஆனால், கூட்டணிக்கு பேர் வைக்க முடியாத நிலையில் தான் அதிமுக இருக்கிறது. அந்தக் கூட்டணி தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் செய்யவில்லை. அவர்கள் தந்தது, ஆளுநர்கள் மூலமாக குடச்சல், நீட், இந்தி திணிப்பு மட்டுமே. இவர்களுக்கு, தமிழகத்தின் மீது எந்தளவுக்கு வன்மம் இருக்கின்றது என்றால், தேர்தலை மனதில் வைத்துக் கூட தமிழகத்திற்கு எதுவும் இல்லை. சமீபத்தில், நான் டெல்லிக்கும் தமிழகத்திற்கும் இடையேயான தேர்தல் என்று கூறினேன். தமிழ்நாட்டை எப்படியாவது நம்மிடம் இருந்து விழுங்கி விடலாம்னு நெனக்குது இந்த காவிக்கூட்டம்; எங்க கருப்பு சிவப்பு பட்டாளம் இருக்கும் வரை, அது நடக்கவே நடக்காது.. அது உங்க அப்பனே வந்தாலும் நடக்காது. நடக்க விடமாட்டோம்.

அதிமுகவை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குறாங்க.. அரசியலில் நேர் எதிரியாக இருந்தாலும் அதிமுக தொண்டர்கள் மீது நாங்கள் உண்மையாகவே பாரிதாப் படுகிறோம் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மாறாக கட்சியை கொண்டு போய் டெல்லியில் அடமானம் வச்சிட்டார் பழனிசாமி; ஒட்டுமொத்த அதிமுகவை அழிக்கும் வேலையை பாஜக செய்கிறது. பிகாரிலும் இதைத் தான் செய்திருக்கிறது.

ஸ்டாலின்

ஆனால், இன்று மீண்டும் சொல்கிறேன். நீங்கள் அந்தர்பல்டி அடிச்சாலும், என்ன முகமூடி போட்டுக் கொண்டு வந்தாலும், புதுசு புதுசா யாரை கூட்டிக் கொண்டு வந்தாலும், எத்தனை ஏவல் அமைப்புகளை வச்சி மிரட்டி பார்த்தாலும் தமிழ்நாடு எப்பவுமே உங்களு Out of Control தான். நாங்க பார்க்காத படையெடுப்பா, திமுக பார்க்காத மிரட்டலாம். இந்திய மேப்ல இருக்கிற எந்த மாநிலத்து மேலயும் காவி அடிச்சிடலாம். தமிழ்நாட்டில் உங்க பாட்சா பலிக்கவே பலிக்காது. இங்க எப்பவுமே நாங்கதான்; எங்க மண்ணில் நாங்கதான் ஜெயிப்போம்.. நாங்க மட்டும்தான் ஜெயிப்போம்” எனத் தெரிவித்திருக்கிறார்.