தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சென்னை எழும்பூர்-கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட பல இடங்களில் நின்று செல்லும்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அரசு தலைமை காஜி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஷவ்வால் மாதத்துக்கான பிறை வியாழக்கிழமை தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் தென்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ரமலான் மாதம் 30 நாட்களாக பூர்த்தியடைவதாகவும், இதனால் நாளை தமிழகம் முழுவதும் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, புதுச்சேரியிலும் சனிக்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூர்- கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி, எழும்பூரில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 11.45 மணியளவில் கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. அதேபோன்று, கன்னியாகுமரியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 11.25 மணியளவில் சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய நிலையங்களில் நின்றுசெல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.