டிடிவி தினகரன் தவெக உடன் கூட்டணி வைக்க விரும்பியதாக செங்கோட்டையன் பேச்சு pt
தமிழ்நாடு

‘டிடிவி தினகரன் தவெக உடன் இணைய விரும்பினார்..’ டெல்லி தான் காரணம்..? உடைத்து பேசிய செங்கோட்டையன்!

டிடிவி தினகரன் தவெக உடன் இணைய விரும்பினார் என்று தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

Rishan Vengai

டிடிவி தினகரன் தவெகவுடன் கூட்டணி அமைக்க விரும்பினார், ஆனால் சூழல் காரணமாக அது நடக்கவில்லை என்று செங்கோட்டையன் கூறினார். அதிமுக-பாஜக கூட்டணியில் தினகரன் இணைந்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்றும் அறிவித்துள்ளார்.

2026ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையில் முதன்முறையாக தேர்தலை சந்திக்க காத்திருக்கிறது தமிழக வெற்றிக் கழகம். முதலில் தவெக, அதிமுக உடன் கூட்டணி வைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவியது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூட பரப்புரை கூட்டத்தில் தவெக கொடியுடன் சிலர் பங்கேற்றதை வரவேற்று பேசியிருந்தார். ஆனால் முடிவில் தவெக-அதிமுக கூட்டணி என்பது இல்லாமல் போனது.

எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய்

அதேபோல டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவும் தவெக உடன் கூட்டணி வைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பே அதிகமாக இருந்தது. டிடிவி தினகரன் கூட விஜய் தலைமையிலான ஒரு கூட்டணி உருவாகும், அக்கூட்டணிக்கும் திமுகவுக்கும் இடையே தான் போட்டி இருக்கும் என்று கூறியிருந்தார். மேலும், எடப்பாடி பழனிசாமியை முதல்வராக ஏற்றுக்கொள்ளும் கூட்டணியில் ஒருபோதும் செல்லமாட்டோம் என்றும் தீர்க்கமாக தெரிவித்திருந்தார்.

விஜய் - டிடிவி தினகரன்

இந்தசூழலில் தான் அமமுக-தவெக கூட்டணி உருவாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டபோது, கடைசி நேரத்தில் அதிமுக-பாஜக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியில் தன்னை இணைந்துக்கொண்டுள்ளார் டிடிவி தினகரன். மேலும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்றும் தினகரன் அறிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் தவெகவில் இணைய விரும்பினார்..

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தவெகவுடன் கூட்டணி அமைக்க விரும்பினார். ஆனால் சூழல் காரணமாக வரவில்லை, எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும்.

கூட்டணி பற்றி ஒவ்வொருவரிடமும் பேசிமுடித்தவுடனே டெல்லியில் இருந்து வந்துவிடுகிறார்கள், பிரச்னை எங்களுக்குத்தானே தெரியும், நான் சொல்லாமல் இருக்கும் வரைக்கும் நல்லது” என கூறினார்.

மேலும் ராமதாஸ் உடன் தவெக கூட்டணியா என்ற கேள்விக்கு நல்லது நடக்கட்டும் என்று பதிலளித்தார்.