தவெக தலைவர் விஜய் Pt web
தமிழ்நாடு

ஈரோடு | பிரதமர் மோடி பேசிய அதே இடத்தில்.. விஜய் பேச அனுமதி கேட்ட தவெக!

ஈரோட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசிய அதே இடத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கேட்டு ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் தவெக நிர்வாகி செங்கோட்டையன் தலைமையிலான தவெகவினர் மனு அளித்திருக்கின்றனர்.

விமல் ராஜ்

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்திற்கு பிறகு, தனது பரப்புரைப் பயணத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்த தவெக தலைவர் விஜய், தற்போது மீண்டும் தொடங்கியிருக்கிறார். புதுச்சேரியில், நாளை மறுநாள் (டிச.9) புதுச்சேரியில் தவெகவின் பொதுக்கூட்டம் நடக்கவிருக்கிறது. இந்நிலையில், இரண்டாவதாக டிசம்பர் 16-ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் பரப்புரை மேற்கொள்ள அனுமதி கேட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமியை சந்தித்து தவெக நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தலைமையிலான தவெகவினர் இன்று மனு அளித்திருக்கின்றனர்.

செங்கோட்டையன்

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், “தவெக தலைவர் விஜய், டிசம்பர் 16ஆம் தேதி ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். வாரி மஹால் அருகே உள்ள ஒரு தனியார் இடம் தேர்வு செய்யப்பட்டு தற்போது, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனைவரும் ஒருங்கிணைந்து இப்பணிகளை மேற்கொள்ள உள்ளோம்” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் மேற்கொள்ளும் பரப்புரைப் பயணத்தில் ரோடு ஷோ என்பது தவிர்க்கப்பட்டுள்ளது. அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு பொதுக்கூட்டத்தில் மக்கள் கலந்துகொள்வார்கள் எனவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

பவளத்தாம்பாளையம் இடம் கேட்டு அனுமதி

ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையம் வாரி மஹால் அருகே 75 ஆயிரம் நபர்கள் வந்து செல்லும் வகையில், உள்ள 7 ஏக்கர் இடத்தில் விஜய் பரப்புரை மேற்கொள்ள அனுமதி கேட்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த இடம், ஈரோட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசிய இடமும், ஜல்லிக்கட்டு நடைபெற்ற இடமும் ஆகும். இந்நிலையில்தான் அங்கு, டிசம்பர் 16 மதியம் 1 மணி முதல் மாலை 6 மணிக்குள் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டிருக்கிறது.

தவெக விஜய்

தொடர்ந்து தவெகவினர், இந்த மனுவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலர்களுக்கும் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அனுமதி வழங்கப்படுமா, இல்லையா என்ற முழு தகவல் நாளைதான் தெரியவரும்.