”தமிழ்நாடு அயோத்தி போல மாற வேண்டுமா?..” - நயினார் நாகேந்திரன் கருத்துக்கு கனிமொழி பதிலடி!
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு அயோத்தி போல மாற வேண்டும் என்று சொன்ன கருத்துக்கு, திமுக எம்.பி கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.
அம்பேத்கரின் 69-வது நினைவு தினத்தையொட்டி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், ”அயோத்தி இந்தியாவில்தான் இருக்கிறது. அயோத்தி இங்கிலாந்திலோ அல்லது ஐரோப்பாவிலோ இல்லையே. அதனால், ”அயோத்தி மாதிரி” தமிழ்நாட்டில் வருவதில் தவறில்லை” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்துக்கு பதிலத்துள்ள திமுக எம்.பி கனிமொழி எக்ஸ் தள பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அப்பதிவில், “எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. கடந்த தேர்தலில் ஆர்.எஸ்.எஸ் - பாஜகவைப் படுதோல்வி அடையச் செய்து, மக்கள் தூக்கியெறிந்த ஃபைசாபாத் தொகுதியில் உள்ள அயோத்தியைப் போலவா? கவலை வேண்டாம்! அப்படி தான் தமிழ்நாடு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது” என தெரிவித்துள்ளார்.

