பாமக விவகாரம் | டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு.. ராமதாஸ் போலீஸில் புகார்!
டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, அன்புமணி பாமகவின் தலைவர் இல்லை என்பது உறுதியாகிவிட்டது என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமகவில் நிலவி வரும் உட்கட்சி பிரச்னை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் தரப்பினர் தனித்தனி தீவாய் மாறி செயல்பட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே தந்தை - மகன் இடையேயான பிளவு, தமிழக அரசியல் களத்தில் நாளுக்குநாள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நிர்வாகிகள் நியமனம், ஆலோசனை, பொறுப்புகள் என இம்மோதல் போக்கு ஒவ்வொரு நாளும் புதுப்புது உச்சத்தை எட்டியது. மேலும் இருதரப்பினர் மோதிக் கொள்ளும் நிலையும் உருவானது. தற்போது இந்த பிரச்னை நீதிமன்றம் வரை சென்றது. பா.ம.க கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாசை ஏற்றதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அன்புமணி ராமதாஸ் தேர்தல் ஆணையத்தில் தவறான ஆவணங்கள் கொடுத்ததை ஏற்று அதன் அடிப்படையில் அன்புமணி ராமதாசை தலைவராக அங்கீகரித்த தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தரப்பில் கொடுக்கப்பட்ட அசல் ஆவணங்களை முறையாக ஆராயாமல் தேர்தல் ஆணையம் தவறான முடிவெடுத்துள்ளது என அதில் குற்றஞ்சாட்டப்பட்டது. இவ்வழக்கு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், பாமக தலைவர் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு முடிவு செய்யும் அதிகாரம் இல்லை என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தலைவர் யார் என்ற விவகாரத்தை சிவில் நீதிமன்றம் விசாரிப்பதே சரியாக இருக்கும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தது.
பாமக உட்கட்சி பூசல் விவகாரத்தில், கட்சியின் தலைவராக அன்புமணியின் பதவிக்காலம் அடுத்தாண்டு ஆகஸ்ட் 1 வரை தொடர்கிறது என முடிவு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்றும், பாமக அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால், நிறுவனர் ராமதாசையோ அல்லது அவரது மகன் அன்புமணியையோ கட்சியின் தலைவர் என தேர்தல் ஆணையம் முடிவு செய்ய முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாமகவின் தலைவர் பதவிதொடர்பாக தேர்தல் ஆணையம் வழங்கிய கடிதத்துக்கு சட்டரீதியானஅங்கீகாரம் இல்லை என்கிற முடிவை டெல்லி உயர் நீதிமன்றம் தனது எழுத்துப்பூர்வமான உத்தரவில் விளக்கியுள்ளது. டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, அன்புமணி பாமகவின் தலைவர் இல்லை என்பது உறுதியாகிவிட்டது என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ளஅறிக்கையில், பாமகவின் தலைவர் அன்புமணி என கூறுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு சட்ட அதிகாரம் இல்லை என டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாகவும், பாமகவுக்கு அங்கீகாரம் இல்லாததால், தேவையெனில் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
தம்மிடம் இருந்து கட்சியைப் பறிப்பதற்கு செய்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள ராமதாஸ், வரும் தேர்தலில் கட்சியின் அங்கீகாரத்தை மீட்டெடுத்து மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தருவேன் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், பாமக விவகாரத்தில் கூட்டு சதியில் ஈடுபட்டுள்ள தேர்தல் ஆணையம் மற்றும் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி காவல் துறையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பினர் புகார் அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி, தேர்தல் ஆணையத்தில் போலி ஆவணங்களை அன்புமணி தாக்கல் செய்துள்ளதாகவும், தாங்கள் அனுப்பிய உண்மையான ஆவணங்களை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஜி. கே.மணி வலியுறுத்தியுள்ளார். மறுபுறம், பாமகவை கைப்பற்ற ஜி.கே.மணி பல்வேறு காரியங்களை செய்துவருவதாக அன்புமணி ஆதரவாளர் கே.பாலு குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அன்புமணி தொடர்பான புகாரில் எழுதியிருப்பது என்னவென்று தெரியாமலேயே ராமதாஸிடம் கையெழுத்து பெற்றுள்ளதாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.

