தவெக மாநாட்டில் விஜய் சொன்ன குட்டிக் கதை
சீமான் சொன்ன அதேகதையை கூறினார் விஜய்
விஜயின் குட்டிக்கதைக்கு சீமான் கொடுத்த ரியாக்ஷன்
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை பாரபத்தி பகுதியில் ஆகஸ்டு 21-ம் தேதியான நேற்று பெரும் மக்கள் படை சூழை நடைபெற்று முடிந்தது.
இதில் பங்கேற்று கட்சிக் கொடியேற்றி வைத்து, கொள்கை தலைவர்களுக்கு மரியாதை செலுத்திய தவெக தலைவர் விஜய் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது அவர் சொன்ன இரண்டு குட்டிக் கதைகள் இணையத்தில் வைரலாகின. அதில் ஒரு குட்டிக்கதையை ஏற்கனவே சீமான் சொல்லிவிட்டார் என்ற தகவல் வேகமாக பரவியது.
இந்நிலையில், விஜய் பேசிய குட்டிக்கதையை 2021-ம் ஆண்டு தேர்தல் பொதுக்கூட்டத்தில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானும் பேசியிருந்த வீடியோ வெளியானது.
மதுரை மாநாட்டில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய் உரையின் இறுதியில் தளபதியை தேடும் ராஜா பற்றிய குட்டி கதை ஒன்றை பகிர்ந்து கொண்டார்.
அந்தக் கதையில், “ஒரு நாட்டில் ஒரு ராஜா, தனக்கு பக்கபலமாக இருக்க தளபதியை தேடுகிறார். சரியான தகுதிகளுடன் 10 பேர் தேர்வாகினர். அதில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டுமென, விதை நெல்லை கொடுத்து அதை வளர்க்கும்படி கூறி தேர்வு வைக்கிறார்.
3 மாதங்கள் கழித்து, அனைவரும் வந்தனர். 9 பேர் விதையை முளைக்கவைத்திருந்தனர், ஆனால் ஒருவர் மட்டும் வெறும் தொட்டியை வைத்திருந்தார். எவ்வளவோ முயன்றும் அது வளரவில்லை என்றார். ராஜா அவரை கட்டியணைத்துவிட்டு, அவரையே தளபதி என்றார்.
காரணம், ராஜா அவர்கள் 10 பேருக்கும் கொடுத்தது அவித்த விதை நெல். அது முளைக்கவே முளைக்காது. ஆனால் அந்த 9 திருட்டு பயலுங்களும், வேறு விதை நெல்லை வைத்து வளர்த்துள்ளனர்.
இதில் நீங்கள்தான் ராஜா. நீங்கள் தேர்வு செய்யப்போகும் தளபதி யார்?” என்ற கேள்வியோடு முடித்தார்.
விஜய் சொன்ன குட்டிக் கதை வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இதே கதையை சீமான் ஏற்கனவே சொல்லிவிட்டதாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
இதற்கு முன்பு 2021-ல் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் குட்டி கதை சொன்ன சீமான், “ஒரு அரசனுக்கு வாரிசு இல்லை, தனக்கு பிறகு நாட்டை ஆளும் இளவரசன் யாரு முடிவெடுக்கனும். அப்போது தன் நாட்டு மக்களுக்கு வாரிசாக ஒரு திறமையான இளைஞனைத் தேர்ந்தெடுக்க விரும்பினான். அதற்காக, அவன் எல்லா இளைஞர்களையும் அழைத்து, ஒரு விதையை கொடுத்து, இதை நட்டு செடியை நன்றாக வளர்த்து கொண்டுவருபவர்கள் எவரோ அவரே நாட்டை ஆளுவார்கள் என்று கூறினான்.
பல இளைஞர்கள் விதையை நன்றாக செடியாக வளர்த்து தாங்கள் தான் இளவரசனாக மாறப்போகிறோம் என்ற ஆசையில் கொண்டுசென்று காட்டினர். ஆனால் ஒருவன் மட்டும் விதையை நட்டு செடி வளரவில்லை என்று மன்னனிடம் போய் காட்டினான். மன்னன் நன்றாக செடி வளர்த்த சிறுவர்களை விட்டுவிட்டு, செடியை வளர்க்காத சிறுவனை இளவரசனாக தேந்தெடுத்தார். எல்லோரும் அதிர்ச்சியாகி கேட்க, நான் கொடுத்தது அவித்த விதை அது எப்படி முளையும் என்று அரசன் கேட்டார்” என சீமான் அந்தக் கதையை கூறியுள்ளார்.
சீமான் பொதுக்கூட்டத்தில் சொன்ன அதே கதையை விஜய் பேசியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சீமான், “அண்ணனிடம் கற்றதை தம்பி சொல்லியிருக்கிறார். நானும் எங்கேயோ கற்றதுதானே... தவறொன்றுமில்லை” என பேசியுள்ளார்.
சீமானிடம் கேள்விகேட்ட செய்தியாளர், நீங்க சொன்ன குட்டிக்கதையை விஜயும் சொல்லியிருக்கார், உங்களுடைய தொண்டர்கள், நிர்வாகிகள் அதை நீங்கள் சொன்ன கதை என்று கூறுகிறார்கள். ஆனால் தவெகவினர் அதுஒரு புனைவுகதை அதை யார் சொன்னால் என்ன என்று கூறுகிறார்கள், நீங்க என்ன நினைக்கிறீங்க என்ற கேள்வியை எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த சீமான், ”கதையா இருந்தாலும் முதல்ல எடுத்து சொன்னது யார் என்பது ஒன்று இருக்குல்ல. நான் அதை 2021 தேர்தலில் வாக்கு சேகரிக்கும் போது, நல்லவனுக்கு ஓட்டு போடுங்கள் என இளவரசன் கதையாக சொன்னேன். அதையே தம்பி தளபதியை தேர்ந்தெடுங்கள்னு சொல்லிருக்காரு. அண்ணனிடம் கற்றதை தம்பி சொல்லியிருக்கிறார். நானும் எங்கேயோ கற்றதுதானே.. அவரும் அப்படியே சொல்லிருக்கிறார். இதில் தவறொன்றுமில்லை” என்று பேசியுள்ளார்.