சீமான்
சீமான் கோவை
தமிழ்நாடு

“கைது பண்ண போறாங்களா? I'm Waiting!” - செய்தியாளர் சந்திப்பில் சீமான் பேச்சு!

Prakash J, PT WEB

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று, கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் நடிகை விஜயலட்சுமி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் சீமான், "விஜயலட்சுமி என்ன அன்னை தெரசாவா; அன்னிபெசன்ட் அம்மையாரா; மணிப்பூர் மக்களுக்காக போராடிய ஐரோம் ஷர்மிளாவா?" என ஆவேசமாக எதிர்கேள்விகள் கேட்டார்.

vijayalakshmi seeman

தொடர்ந்து அவர், ”எனக்கும் உனக்கும் திருமணம் ஆனது என்பதற்கு ஏதாவது ஒரு போட்டோ, ஏதாவது ஒரு சான்று இருக்க வேண்டும் அல்லவா? எனக்கு முன்பு எத்தனை பேருடன் திருமணம்? அதை யோசிக்க வேண்டும் அல்லவா?” என விஜயலட்சுமிக்கு அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.

பின் செய்தியாளர்களிடம் “என் மனைவி, தாயார் சொந்தபந்தங்கள் யாரும் இந்த செய்தியால் வருத்தப்படவில்லை. என்னைப் பற்றி பேச அவருக்கு (விஜயலட்சுமிக்கு) என்ன தகுதி இருக்கிறது? நான் என்ன வேலை செய்வது... மக்களுக்காக போராடவா அல்லது விஜயலட்சுமியை எதிர்த்துப் போராடவா? குற்றச்சாட்டை ஆதாரங்களுடன் வைக்க வேண்டும். எனக்கென்று ஒரு கண்ணியம், குடும்பப் பின்னணி, மரியாதை இருக்கிறது. அன்பான அழகான மனைவி, என்னை நம்பி லட்சக்கணக்கான அக்கா தம்பிகள் இருக்கிறார்கள்.

இதுகுறித்து என் பிள்ளைகள் கொந்தளிக்கும்போது, ’அமைதியாக இருங்கள், அந்த அசிங்கத்திற்குள் போகாதீர்கள்’ எனக் கூறி வருகிறேன். ’இந்த விஜயலட்சுமிக்கும் எனக்கும் பிரச்னை இருக்கிறது’ என்கிறார்கள், சரி அந்த விஜயலட்சுமிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? விஜயலட்சுமிக்கு வீரலட்சுமி என்ன டப்பிங்கா? ’இன்னும் ஓரிரு நாட்களில் மாற்றி மாற்றி தலைமுடியைப் பிடித்து சண்டைபோடுவார்கள்’ என அன்றே கூறினேன்.

உதவியாளர்கள் மேலே சேற்றை வாரி இரைக்கின்றனர். கர்நாடகாவில் அவர் பலபேரைப் பழிவாங்கி இருக்கிறார். அவர்மீது எனக்கு பரிதாபம்தான் வருகிறது. பெரியார் சொல்லியிருப்பதுபோல மானமுள்ள ஆயிரம்பேருடன் நான் சண்டையிடுவேன்; ஆனால் மானமில்லாத ஒருத்தருடன் நான் சண்டைபோட தயாரில்லை” என்றார் ஆவேசமாக.

அப்போது அவரிடம் ‘கடந்த 2 நாட்களாக நீங்கள் கைதுசெய்யப்பட உள்ளதாக தகவல் பரவி வருகிறதே’ என செய்தியாளரொருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சீமான், “I AM WAITING” என்றார்.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி சென்னை, ராமாபுரம் போலீஸ் நிலையத்துக்கு வந்த விஜயலட்சுமி, சீமான் மீது நடவடிக்கை எடுக்கும் படியும், நிறுத்திவைத்த வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்கும்படியும் புகார் கொடுத்தார்.

தொடர்ந்து, ஆகஸ்ட் 31ஆம் தேதி ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமியிடம் இதுதொடர்பாக சுமார் 6 மணி நேரம் கோயம்பேடு துணை கமிஷனர் உமையாள் விசாரணை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.