“இரக்கமில்லாத மனிதர்... சீமானை கைது செய்ய வேண்டும்” நடிகை விஜயலட்சுமி மீண்டும் பரபரப்பு புகார்!
“ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து, 7 முறை என் அனுமதியின்றி கருச்சிதைவு செய்து, என்னை தற்கொலைக்கு தூண்டிய சீமானை கைது செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நடிகை விஜயலட்சுமி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “கடந்த 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை மீண்டும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என கோரியிருக்கிறேன். அந்த புகாரில், 2008-ல் மதுரை மீனாட்சியம்மன் கோவில் முன்பாக சீமானின் உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் சீமானுக்கும் எனக்கும் மாலை மாற்றி திருமணம் நடைபெற்றது. ‘கிறிஸ்தவர் என்பதாலும் பெரியாரிஸ்ட் என்பதாலும் தாலி கட்ட மாட்டேன்’ என்றார்.

மேலும் ‘பிரபாகரன் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ளும் வரை இதை வெளியில் கூற வேண்டாம்’ என்று தெரிவித்திருந்தார். என்னை திருமணம் செய்து கணவராக வாழ்ந்து 7 முறை என் சம்மதம் இன்றி கருக்கலைப்பு மாத்திரைகளை கொடுத்தார் சீமான். அதன் பின் என்னை ஏமாற்றிவிட்டு கயல்விழியை திருமணம் செய்து கொண்டார்.
இந்த புகார்களை மீண்டும் மறு விசாரணை செய்ய வேண்டும் என தற்போது தமிழர் முன்னேற்ற படையின் ஒருங்கிணைப்பாளர் வீரலட்சுமியுடன் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்துள்ளோம். தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலின் எடுக்கும் நடவடிக்கையில்தான் எனது வாழ்வும் சாவும் உள்ளது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இரக்கமில்லாத மனிதர். அவருடைய மனைவியாக இருந்த என்னையே மிக மோசமாக சித்தரித்து விமர்சித்தார். தனது கட்சியில் 50 சதவீதம் பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக பொய் பிரச்சாரம் செய்கிறார் சீமான். இந்த வழக்கை பொறுத்தவரை அதிமுக எந்த நடவடிக்கையும் பெரிதாக எடுக்கவில்லை. இலங்கையில் நடந்த போர் தொடர்பாக தமிழ்நாட்டில் போராட்டம் நடத்தி வந்ததால் அதிமுக சீமானை விசாரிக்காமல் என்னை விசாரித்தது.
சீமான் என்னுடன் இருந்த தனிப்பட்ட புகைப்படங்களையும் காணொளி காட்சிகளையும் ஊடகங்களில் வெளியிட்டேன். நானும் சீமானும் கணவன் மனைவியாக இருந்ததற்கு இது ஆதாரம். சீமான் என்னிடம் ஒரு கோடி ரூபாய் அளித்ததாக மாற்றி பேசுகிறார். என்னிடம் 3.5 லட்சம் மட்டுமே அவர் கொடுத்ததற்கு ஆதாரங்கள் உள்ளது. தலைவர் பிரபாகரின் பெயரை கொண்டு திமிருடன் பேசி வருகிறார். சீமான் பிரபாகரனின் பெயரை இழிவுபடுத்தி வருகிறார்.

சீமான் மீது முதலமைச்சர் ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன். மீடியாவால், சமூக வலைதளத்தால்தான் நான் இன்று உயிரோடே இருக்கிறேன். சீமானால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு யார் இருந்தாலும் தயங்காமல் புகார் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். என்னை பணத்திற்காக இதையெல்லாம் செய்பவள் என்று மட்டும் கூறிவிடாதீர்கள். தயவுசெய்து கேவலப்படுத்தாதீர்கள். இறந்து போய்விடலாம் என பலமுறை நினைத்திருக்கிறேன். சீமானை கைது செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியதால்தான் இத்தனை நாட்கள் விட்டிருந்தேன். ஆனால், இனி சீமானை கைது செய்ய வேண்டும். சீமான் தூண்டுதலின் பேரில் மதுரை செல்வம் என்பவர் என்னை குறித்து தவறான செய்திகளை பரப்பி வருகிறார். கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்றார்.

தொடர்ந்து அவரிடம் ‘11 ஆண்டுகளுக்குப் பின் இப்போது புகார் கொடுப்பதன் காரணம் என்ன?’ என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, அவரை அவதூராக ஒருமையில் பேசிய விஜயலட்சுமி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.