மாதிரிப் படம் created by ai
தமிழ்நாடு

20 சவரன் நகை., வெள்ளிப் பொருட்கள்.. மீட்டுக் கொடுத்த தூய்மைப் பணியாளர்.. அடுத்த நெகிழ்ச்சி சம்பவம்!

திருவாரூரில் தவறவிடப்பட்ட 20 சவரன் நகையை காவல்துறையிடம் திருப்பியளித்த தூய்மைப்பணியாளர் துரையை என்பவரை பலரும் பாரட்டி வருகின்றனர்.

Premkumar S

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் துரை. இவர், திருவாரூர் நகராட்சித் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். அதன்படி, இன்று காலையில் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது 20 பவுன் நகை மற்றும் முக்கால் கிலோ வெள்ளி அடங்கிய பை ஒன்றை பார்த்தார். அதனை உடனடியாக திருவாரூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார். காவல்துறையின் விசாரணையில், சென்னையில் இருந்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக ராதாகிருஷ்ணன் என்பவர் அவரது குடும்பத்தினரும் வந்தபோது 20 பவுன் நகையை தவறவிட்டது தெரியவந்தது. தொடர்ந்து, அவர்கள் திருவாரூர் நகர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.

தூய்மைப் பணியாளர்

இந்த நிலையில் தான், அவர்கள் புகாரளிப்பதற்கு முன்னதாகவே தூய்மை பணியாளர் துரை, தங்க மற்றும் வெள்ளி பொருட்களை திருவாரூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். அவர், திருவாரூர் தியாகராஜர் கோவில் அருகில் உள்ள வீதியில் தூய்மை பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது துரை அந்த தங்க மற்றும் வெள்ளி பொருட்கள் அடங்கிய நகை பையை பார்த்து அதனை எடுத்து கொடுத்தாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மனமகிழ்ந்த ராதாகிருஷ்ணன் குடும்பத்தினர் துரையை அழைத்து நன்றி தெரிவித்திருக்கின்றனர். தொடர்ந்து, திருவாரூர் நகர காவல் நிலைய காவல் ஆய்வாளருக்கு துரைக்கு மாலை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இதுபோலவே, கடந்த மாதம் சென்னை பாண்டி பஜார் பகுதியில் தூய்மைப் பணி மேற்கொண்டிருந்த போது தவறவிடப்பட்ட 45 சவரன் நகையை தூய்மைப் பணியாளர் பத்மா என்பவர் காவல்துறையிடம் மீட்டு அளித்திருந்தார். ஏழ்மையான சூழ்நிலையிலும் நகையை தானே வைத்துக் கொள்ளாமல் திருப்பியளித்ததற்காக பத்மாவை நடிகர் ரஜிகாந்த் உட்பட பலரும் பாராட்டியிருந்தனர்.

அஞ்சல் துறையின் சிறப்பு தபால் தலை

முதல்வர் ஸ்டாலின் பத்மாவை அழைத்து 1 லட்சம் ரூபாய் பரிசு தொகையையும் கொடுத்திருந்தார். மேலும், பத்மாவிற்கு தமிழக அஞ்சல் துறை சிறப்பு தபால்தலை வெளியிட்டு சிறப்பித்திருந்தது. இந்த நிலையில் தான், திருவாரூரில் 20 சவரன் நகையை நேர்மையுடன் காவல்நிலையத்தில் அளித்திருக்கும் தூய்மைப் பணியாளர் துரையின் செயலும் நடந்திருக்கிறது. இதையடுத்து, இவருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.