TN sanitation worker padma honoured with postage stamp
பத்மாஎக்ஸ் தளம்

45 சவரன் நகைகளை ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்.. தபால் தலை வெளியிட்டு கவுரவித்த அஞ்சல் துறை!

சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகையை நேர்மையாக போலீஸாரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் பத்மாவிற்கு, தமிழக அஞ்சல் துறை சார்பாக சிறப்பு தபால் தலை வெளியிட்டு கௌரவித்துள்ளது.
Published on

சென்னையில் சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகைகளை, நேர்மையுடன் காவல் துறையினரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மையைப் பாராட்டும் வகையில், தமிழக அஞ்சல் துறையின் மத்திய கோட்டம், அவரது புகைப்படத்துடன் கூடிய சிறப்பு தபால் தலை ஒன்றை வெளியிட்டு கௌரவித்துள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பத்மா என்பவர் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி சென்னை தி.நகர் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தபோது தரையில் கிடந்த ஒரு பையை அவர் கண்டெடுத்தார். அதில் 45 சவரன் தங்கம் நகை இருந்ததை அறிந்து உடனடியாக பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அதுதொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அந்த நகை நங்கநல்லூரைச் சேர்ந்த பரமேஷ் என்பவருக்குச் சொந்தமானது என தெரியவந்தது. பின்னர் உரிமையாளரிடம் நகை ஒப்படைக்கப்பட்டது.

TN sanitation worker padma honoured with postage stamp
padmax page

பத்மாவின் இந்த நேர்மையான செயல் பொதுமக்களிடையே பெரும் பாராட்டையும் பெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை நேரில் அழைத்து ஒரு லட்சம் ரூபாய் காசோலையை வழங்கி பாராட்டினார். இதனைத் தொடர்ந்து சென்னை மத்திய கோட்டம் தமிழக அஞ்சல் துறை சார்பில், பத்மாவின் நேர்மையைப் போற்றும் விதமாக அவரது புகைப்படத்துடன் கூடிய சிறப்பு தபால் தலை (மை ஸ்டம்ப்) ஒன்றை வெளியிட்டு அவரைக் கௌரவித்துள்ளனர். மேலும், இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி சார்பில், அவரது பெயரில் பிரீமியம் சேமிப்புக் கணக்கும் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல் ரூபாய் 15 லட்சம் மதிப்பிலான விபத்துக் காப்பீடு வழங்கப்பட்டு அதற்கான ஆவணங்களை மத்திய அஞ்சல் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் விஷ்ணுராஜ், பத்மாவிடம் வழங்கியுள்ளார். பத்மாவின் நேர்மையும் சமூகப் பொறுப்புணர்வும் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

TN sanitation worker padma honoured with postage stamp
”தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சியின் கீழ் பணி அமர்த்தப்படுவார்கள்” - அமைச்சர் சேகர் பாபு.!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com