உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டபோது அவருடைய காரை மருமகன் சபரீசன் ஓட்டி வந்தது பலரது புருவங்களையும் உயர்த்தியுள்ளது. இது குறித்து பின்னணியை பெருஞ்செய்தி பகுதியில் அலசலாம்...
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் காலத்துக்குப் பின் திமுகவை கையில் எடுத்த மு.க. ஸ்டாலின், கட்சியில் மேற்கொண்ட மிக முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்று, குடும்ப உறுப்பினர்களின் செயல்பாட்டை வரையறைக்குள் கொண்டுவந்தது.
சென்ற 10 ஆண்டுகளுக்கும் மேலாக, தன்னுடைய மாமனார் ஸ்டாலினுக்கு உதவும் பணியில் சபரீசன் ஈடுபட்டிருக்கிறார். கருணாநிதியின் மறைவுக்குப் பின் ஸ்டாலின் தலைமையில் திமுக எதிர்கொண்ட 2019, 2021, 2024 ஆகிய மூன்று தேர்தல்களிலுமே கட்சியின் வியூக வகுப்பில் முக்கியமான பங்காற்றினார் சபரீசன். அதேபோல, 'பிராண்ட் ஸ்டாலின்' உருவாக்கத்திலும் அவர் முக்கிய பங்காற்றினார்.
திமுகவின் முக்கியமான அதிகார மையங்களில் ஒருவர் சபரீசன் என்றாலும், இதுவரை பொதுவெளியில் அவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. பின் இருக்கையில் அமர்ந்தபடியே கட்சிப் பணிகளில் ஈடுபடுகிறார். கருணாநிதிக்கு மாறன் செயல்பட்டதுபோல, ஸ்டாலினுக்கு சபரீசன் செயல்படுகிறார்; ஆகையால், கட்சியில் அவரை நேரடியாக ஈடுபடுத்த வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளில் ஒரு தரப்பினர் ஏற்கெனவே பேசிவருகின்றனர். ஆனால், மகன் உதயநிதி, தங்கை கனிமொழி மற்றும் தயாநிதி மாறன் என்று மூவர் நேரடியாக கட்சியிலும் ஆட்சியிலும் பங்கு வகிக்கும் நிலையில், கூடுதலாக சபரீசனையும் நேரடி அரசியலுக்கு கொண்டுவந்தால், அது பாஜக அதிமுக விமர்சனத்திற்கு கூடுதல் வாய்ப்பளிக்கும் என்று கட்சிக்குள்ளேயே இன்னொரு தரப்பினர் பேசிவருகின்றனர்.
இத்தகு சூழலில்தான், அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன ஸ்டாலின் காரை ஓட்டிவந்தார் சபரீசன். நாட்டின் முன்னணி ஊடகங்கள் உட்பட எல்லோர் கவனமும் அன்றைக்கு அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தது. அப்படி இருக்க சபரீசன் கார் ஓட்ட ஸ்டாலின் அமர்ந்து வந்தது, கட்சியில் நேரடியாக அவரைக் கொண்டுவருவதை மறைமுகமாக உணர்த்தும் குறியீடா என்று கட்சியினர் மத்தியில் பேச்சு உருவாகியுள்ளது.
"2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சியில் நேரடியாக சபரீசனின் பணி அதிகரிக்கும்; கூடுதலாக டெல்லி அரசியலிலும் அவருக்கு கவனம் செலுத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது" என்று பேசிக்கொள்கின்றன அறிவாலய வட்டாரங்கள். முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அடுத்தடுத்த நகர்வுகள் வெளிப்படுத்தும்.