‘நீட்டா விஷ்ணு ஆர்கானிக்’ என்ற பெயரில் இயற்கை அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்து வரும் நிறுவனத்தை நடத்தி வருபவர் விஷ்ணு. இவர் instagram influencer ஆகவும் விஷ்ணு பொலிட்டிக்கல் லென்ஸ் என்ற பெயரில் யூடியூப் சேனலும் நடத்தி வருகிறார். தமிழக வெற்றி கழக ஆதரவாளராக தொடர்ந்து வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார். அது மட்டும் அல்லாது ஐயப்பன் பக்தி பாடல்களையும் வெளியிட்டுள்ளார். இந்நிலையில், வீடு ஒன்றில் instagram influencer ஆன விஷ்ணு தாக்கப்பட்டு மிரட்டப்படும் காட்சிகள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது.
இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு, வீடியோ எடுத்து தன்னை மிரட்டி சிலர் பணம் கேட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த போது, சம்பந்தப்பட்ட நபர்கள் விஷ்ணு மீது ஒரு பரபரப்பு புகார் அளித்தனர். அவரது மனைவி, youtuber-ம், பிரபலமான மேக்கப் ஆர்டிஸ்ட் அஸ்மிதாதான் விஷ்ணுவின் வீடியோவை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார் என பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
இந்நிலையில் அவரது மனைவி அஸ்மிதா விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், விஷ்ணு தன்னைத் தாக்கி துன்புறுத்துவதாகவும், தன்னை பயன்படுத்தி ஆன்லைன் டிரேடிங் மோசடி செய்து பலரிடம் பணத்தை ஏமாற்றியுள்ளதாகவும் புகார் அளித்ததன் அடிப்படையில் இன்ஸ்டா பிரபலம் விஷ்ணுவை விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் அதிரடியாக சில தினங்களுக்கு முன் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு மீது ஆன்லைன் டிரேடிங் மோசடி தொடர்பாகவும் புகார் என்பது அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தஞ்சாவூரைச் சேர்ந்த சந்திரசேகரன் என்ற முதியவர் இன்ஸ்டா பிரபலமான விஷ்ணு தனது டிரேடிங் கம்பெனி மூலமாக தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக பணத்தை ஏமாற்றி சுமார் 1.62 கோடி ரூபாய் மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
குறிப்பாக, ஐ.டி ஊழியரான தனது மகள் ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராமில் விஷ்ணுவின் மனைவி அஸ்மிதா மேக்கப் தொடர்பாக பல்வேறு வீடியோக்களை பார்த்து ரசித்து வந்ததாகவும், அதில் விஷ்ணு ஆன்லைன் டிரேடிங் செய்வது குறித்தும் வீடியோ வெளியிட்டு இருந்ததாகவும் கூறியுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் உள்ள விளம்பரத்தை பார்த்து இன்ஸ்டா பிரபலமான விஷ்ணுவின் ட்ரேடிங் கம்பெனியில் முதலீடு செய்வதற்கு விஷ்ணுவை தொடர்பு கொண்டு பேசியதாக சந்திரசேகர் தெரிவித்துள்ளார். பணத்தை முதலீடு செய்தால் 4 சதவீதம் வரை லாபம் சம்பாதிக்கலாம் என கூறி ஆசை வார்த்தை காட்டி நம்ப வைத்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த முதலீடு தொடர்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு விருகம்பாக்கத்தில் உள்ள ஐ.ஏ.எஸ் - ஐ.பி.எஸ் அதிகாரிகள் குடியிருப்பில் இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு அவரது தாய் ஆனந்தி, தங்கை வித்யா மற்றும் மனைவி அஸ்மிதா ஆகியோரை சந்தித்து பேசியதாக தெரிவித்துள்ளார்.
தனது தாய்க்கு 25 வருட டிரேடிங் அனுபவம் இருப்பதாக கூறி நீட்டா விஷ்ணு ஆர்கானிக் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் தொழில் செய்து வருவதாகவும் தன்னை நம்ப வைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
தன்னுடைய டிரேடிங் கம்பெனியான connoisseur இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் தவணை முறையில் சுமார் 62 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை முதலீடு செய்ததாக சந்திரசேகர் தெரிவித்துள்ளார். டிசம்பர் 2023 ஆம் ஆண்டு வரை லாபம் எனக் கூறி தொகையை தனக்கு மாதமாதம் விஷ்ணு அனுப்பி வைத்ததாக தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், திடீரென பணத்தை அனுப்புவதை நிறுத்திய காரணத்தினால், சென்னையிலேயே தனது மகனின் வீட்டில் தங்கி பணத்தை கேட்டதாகவும் முன் தேதியிட்டு காசோலைகளை கொடுத்ததாகவும் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். அசல் பணத்தை மட்டும் தந்தால் போதும் லாபம் எல்லாம் வேண்டாம் என்று தெரிவித்த போதும் திடீரென தனக்கு கொடுத்த காசோலையை வங்கியில் போடக்கூடாது என insta பிரபலம் விஷ்ணு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதாகவும் கூறியுள்ளார்.
இது மட்டுமல்லாது தனக்குத் தெரியாமல் என் மனைவி நிர்மலாதேவியிடம் 27 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மூத்த மகள் சைதன்யாவிடம் இருந்து 29 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இளையமகள் ஐஸ்வர்யாவிடமிருந்து 43 லட்சம் என மொத்தமாக எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் மட்டும் ஒரு கோடியை 62 லட்ச ரூபாய் பணத்தை முதலீடாக பெற்று இன்ஸ்டா பிரபலமான விஷ்ணு மற்றும் அவரது மனைவி அஸ்மிதா, விஷ்ணுவின் தாய் ஆனந்தி மற்றும் விஷ்ணுவின் தங்கை ஸ்ரீவித்யா ஆகியோர் நாடகம் ஆடி நம்ப வைத்து மோசடி செய்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்.
தன் பெயரைப் பயன்படுத்தி ஆன்லைன் டிரேடிங் மோசடி செய்ததாக மனைவி அஸ்மிதா புகார் அளித்திருந்த நிலையில், அவரும் இன்ஸ்ட்டா பிரபலமான விஷ்ணுகுமார் உடன் சேர்ந்து அவரது தாய், தந்தை கூட்டாக மோசடி செய்த விவகாரத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராம் மற்றும் youtube இல் பிரபலமாகி குடும்பமாக சேர்ந்து இன்னும் எத்தனை பேரை ஏமாற்றியுள்ளார்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.