கர்நாடகா | மீண்டும் முதல்வர் யுத்தம்.. போர்க்கொடி தூக்கும் 100 காங். எம்.எல்.ஏக்கள்!
கர்நாடகா மாநிலத்தில், கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து முதல்வரைத் தேர்வு செய்வதில் நீண்ட இழுபறி நீடித்தது. பின்னர், ஒருவழியாக சித்தராமையா முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். துணை முதல்வராக டி.கே.சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டார். அப்போது, இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி வழங்குவதாக கூறி, காங்கிரஸ் மேலிடம் அவர்களை சமாதானம் செய்ததாகக் கூறப்பட்டது. இரண்டு ஆண்டுகள் சித்தராமையா ஆட்சி கழிந்த நிலையில், தற்போது முதல்வர் பற்றிய பேச்சு மீண்டும் அங்கு புயலைக் கிளப்பியுள்ளது.
”கர்நாடக அரசியலில் செப்டம்பருக்குப் பின் தலைகீழ் திருப்பம் ஏற்படும்” என அண்மையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜண்ணா கூறியிருந்தார்.
இந்நிலையில், சிவக்குமாருக்கு நெருக்கமானவராக கருதப்படும் எம்.எல்.ஏ. இக்பால் ஹுசேன், ”கர்நாடகாவின் முதலமைச்சராக இன்னும் 2 முதல் 3 மாதங்களில் D.K.சிவக்குமார் பதவியேற்க வாய்ப்புள்ளது” எனக் கூறியிருந்தார். ஆனால், சித்தராமையா தனது 5 ஆண்டு ஆட்சிக்காலத்தை பூர்த்தி செய்வார் என அவரது மகன் யதீந்திரா கூறியுள்ளார்.
இதற்கிடையே, துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் எம்.எல்.ஏ. இக்பால் ஹுசேன், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிலருடன் மூத்த காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவைச் சந்தித்துப் பேசினார். இதனால், இவ்விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
இதுதொடர்பாக எம்.எல்.ஏ. இக்பால் ஹுசேன், “இது நான் மட்டுமல்ல. 100க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் மாற்றத்தை ஆதரிக்கின்றனர். அவர்களில் பலர் இந்த தருணத்திற்காக காத்திருக்கிறார்கள். அவர்கள் நல்லாட்சியை விரும்புகிறார்கள். மேலும், டி.கே.சிவகுமார் ஒரு வாய்ப்புக்கு தகுதியானவர் என்று நம்புகிறார்கள். அவர் கட்சிக்காக அயராது உழைத்து, அமைப்பை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்துள்ளார். அவர் கே.பி.சி.சி தலைவராக ஆனதிலிருந்து கட்சியின் எதிர்கால மாற்றத்தை அனைவரும் கண்டிருக்கிறார்கள்.
அவரது முயற்சிகளால், அதிகமான மக்கள் அவருக்கு ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர. மேலும் அவருக்கு ஆதரவாக நிற்கத் தயாராக உள்ளனர். முதல்வர் மாற்றம் பிரச்சினை குறித்து இன்று திரு. சுர்ஜேவாலாவிடம் நிச்சயமாகப் பேசுவேன். மாற்றம் இப்போது நடக்கவில்லை என்றால், 2028இல் காங்கிரஸ் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடியாது. கட்சியின் நலன்களுக்காக இது இப்போது அவசியம்” எனத் தெரிவித்துள்ள்ளார்.
ஆனால், மாற்றம் குறித்த கருத்தை முதல்வர் சித்தராமையா மறுத்துள்ளார். மைசூரில் பேசிய அவர், “காங்கிரஸ் அரசு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு பாறை போல உறுதியாக இருக்கும்“ என்றார். முதலமைச்சரின் ஆதரவாளர்கள் அவரை அடிக்கடி 'பாறை' என்று அழைக்கிறார்கள். அதைவைத்தே அவர் அப்படி பேசியிருந்தார். மேலும் அப்போது அவர் அருகில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் இருந்தது குறிப்பிடத்தக்கது.
சிவகுமாருடனான அவரது உறவுகள் குறித்து ஊடகத்தினர் கேள்வி எழுப்பியபோது, ஒற்றுமையைக் காட்ட துணை முதல்வரின் கையைப் பிடித்து, "நாங்கள் நல்லுறவில் இருக்கிறோம். மற்றவர்கள் சொல்வதை நாங்கள் கேட்பதில்லை" என முதல்வர் விளக்கம் அளித்தார்.