காவல் ஆணையரோடு நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, படுகொலை செய்யப்பட்ட ஜாகிர் உசேனின் உடலை பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜாகிர் உசேனின் மகன் இச்சூர் ரகுமான், “இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்கிறேன் என கமிஷனர் உறுதியளித்துள்ளார்; அதனால்தான் உடலை பெற்றுக்கொள்ள சம்மதித்தோம்; ஒருவேளை சஸ்பெண்ட் செய்யாவிட்டால், மீண்டும் போராடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சட்டப்பேரவையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஜாகீர் உசேன் கொலை தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பேசிய அவர், “ஜாகீர் உசேன் தனக்கு கொலை அச்சுறுத்தல் இருக்கும் எனக் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. உரிய நடவடிக்கை எடுக்காத காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின்படி, மறைந்த ஜாகீர் உசேனுக்கும் அதேபகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்கிற தவ்ஃபீக் என்பவருக்கும் நிலம் தொடர்பான பிரச்னை இருந்துள்ளது. இடப்பிரச்னை தொடர்பாக தவ்ஃபீக் மற்றும் அவரது மைத்துனர் அக்பர் பாஷா ஆகியோர் ஜாகீர் உசைன் மீதும், ஜாகீர் உசேன் எதிர்தரப்பினர் மீதும் மாறி மாறி புகாரளித்து வந்துள்ளனர். இவற்றின்மீது காவல்துறையினரால் சிஎஸ்ஆர் எண்கள் வழங்கப்பட்டு விசாரணை நடந்துவந்துள்ளது.
ஜாகீர் உசேன் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டதைத் தொடர்ந்து, எதிர்த்தரப்பினரை காவல்துறையினர் அழைத்து விசாரித்துள்ளனர். மேற்படி விசாரணை நடைபெற்று வந்த சூழலில், நேற்றைய தினம் இந்த கண்டிக்கத்தக்க சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த கொலை வழக்கில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு, குற்றவாளிகள், அவர்களுக்குப் பின்னணியில் இஒருந்தவர்கள் என அனைவரது மீதும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு பாரபட்சமின்றி நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். சட்டத்தை யாரும் தங்களது கைகளில் எடுத்துக்கொள்ள இந்த அரசு அனுமதிக்காது. இந்த கொலை வழக்கு மட்டுமல்ல. எந்த குற்றத்தில் ஈடுபட்டவராக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.